முதல்வர் பழனிசாமி குறித்து கொடநாடு விவகாரத்தை பேசக்கூடாது என்கிற நீதிமன்ற உத்தரவை மீறி திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதால் நடவடிக்கை கோரி அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாக அவர்மீது அவதூறு வழக்கை முதல்வர் பழனிசாமி கடந்த வாரம் தொடர்ந்தார்.
ஏற்கெனவே இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்நிலையில் நேற்றும் அதற்கு முன் தினமும் ஸ்டாலின் இதே விவகாரத்தை பேசியதாக அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் அதிமுகவின் வழக்கறிஞர் பாபுமுருகவேல் புகார் அளித்தார்.
இதுகுறித்து அவரிடம் இந்து தமிழ் திசை சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:
தேர்தல் ஆணையத்தில் என்ன விஷயத்துக்காக புகார் அளித்தீர்கள்?
கடந்த 20, 21-ம் தேதி திருவாரூரிலும், முசிறியிலும் கொடநாடு கொலை விவகாரத்தில் முதவல் பழனிசாமியை தொடர்புப்படுத்தி ஸ்டாலின் பேசுகிறார். ஏற்கெனவே இது சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தில் ஒரு தடையுத்தரவை பெற்றுள்ளோம்.
அதாவது கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில் இதுசம்பந்தமாக யாரும் பேசவோ எழுதவோ கூடாது, செய்தி போடக்கூடாது என்று உத்தரவு உள்ளது.
இதற்கு எதிராக ஸ்டாலின் ஆதாரமற்ற முறையில் முதல்வர் மீது குற்றச்சாட்டை வைக்கிறார். இது அப்பட்டமாக தேர்தல் நடத்தை விதிமீறலாகும். அதனால் இது சம்பந்தமாக இந்த விவகாரத்தை அவர் மேலும் பேசாமல் இருக்க தடை விதிக்கவேண்டும், அவர்மீது தேர்தல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து மனு அளித்துள்ளோம்.
துரைமுருகன் மீது என்ன புகார் அளித்தீர்கள்?
ஆமாம், யார் அதிக ஓட்டு வாங்கித் தருகிறார்களோ அவர்களுக்கு ஐம்பது லட்சம் ரூபாய் தருகிறேன் என்று செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார். 6 தொகுதிகளில் எந்த தொகுதியில் அதிக வாக்கு வாங்கித்தருகிறார்களோ அவர்களுக்கு ரூ.50 லட்சம் தருகிறேன் என்று பேசியுள்ளார்.
ஒரு தொகுதியில் தாராளமாக ரூ.50 லட்சம் செலவு செய்யுங்கள் நான் திருப்பி தருகிறேன் என்கிறார். மொத்தமே ரூ.70 லட்சம்தான் செலவு செய்யவேண்டும் என தேர்தல் ஆணையம் சொல்கிறது. ஆனால் இவர் தொகுதிக்கு ரூ.50 லட்சம் செலவு செய்ய சொல்கிறார்.
இதே போன்று வேலூர் நகராட்சியில் யாரும் வரிகட்டாதீர்கள் என்று சொல்கிறார். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.
அதேபோன்று இதுவரைக்கும் நாடாளுமன்றத்துக்கு சென்ற எந்த எம்பியும் என்மகன் மாதிரி ஆங்கிலம் பேசியதில்லை என்று அத்தனை எம்பிக்களையும் அவமானப்படுத்தியுள்ளார். இந்த 3 குற்றச்சாட்டுக்களுக்காக புகார் அளித்து அவர் வேட்பு மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.