தமிழகம்

துரைமுருகனின் வீட்டை முற்றுகையிட முயன்ற தேமுதிகவினர்: எதிர்ப்பு தெரிவித்து திமுகவினரும் திரண்டதால் பரபரப்பு

செய்திப்பிரிவு

வேலூரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட முயன்றதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவுடன் கூட்டணி குறித்துப் பேசும்போதே திமுக பக்கமும் தேமுதிக பேசியதாகத் தகவல் வெளியானது. அதை துரைமுருகனும் உறுதி செய்தார். தங்களிடம் கூட்டணி குறித்துப் பேச வந்ததாகவும், இடம் இல்லை என அனுப்பிவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, துரைமுருகனிடம் 10 நாட்களுக்கு முன்பே தான் பேசியதாக தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.

இந்நிலையில், வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகனின் வீட்டை இன்று (வெள்ளிக்கிழமை) தேமுதிகவினர் சிலர் மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் திடீரென முற்றுகையிட முயன்றனர். துரைமுருகன் கருத்துகளால் கோபமடைந்த அவர்கள், "துரைமுருகன் ஒழிக" என கோஷமிட்டனர்.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி முற்றுகையிட முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.இதனால் போலீஸாருக்கும் தேமுதிகவினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, தேமுதிகவினர் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன்பின், தேமுதிகவினரை போலீஸார் கைது செய்தனர்.

இதனிடையே, திமுகவினர் சிலரும் அப்பகுதிக்கு வந்து துரைமுருகன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக கோஷமிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT