தமிழகம்

தோல்விக்கு பிறகு திமுக எழுச்சி பெற்றுள்ளது: விழுப்புரத்தில் க.அன்பழகன் பேச்சு

செய்திப்பிரிவு

தோல்விக்கு பிறகு திமுக எழுச்சி பெற்றுள்ளது என்று விழுப்புரத்தில் சனிக்கிழமை இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் பேராசிரியர் அன்பழகன் பேசினார்.

விழுப்புரம் மாவட்ட திமுக சார்பில் பெரியார் சிலை அருகில் சனிக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமைவகித்தார். பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கலந்து கொண்டு பேசும்போது:

பேராசிரியர் என்ற பெயர் என்னோடு மறைந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு பிறகு பொன்முடிக்கு அந்த பெயர் நிலைத்து நிற்கும். திமுக பாரம்பரியம் மிக்க கட்சியாகும். திடீரென்று ஆட்சிக்கு வந்த கட்சி அல்ல. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக-வுக்கு கிடைத்த வெற்றி சாதனையால் கிடைத்த வெற்றி கிடையாது. தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றி 144 தடை உத்தரவை பிறப்பித்து வெற்றிபெற்றுள்ளார்கள்.

இன்றைக்கு தேர்தல் ஆணையம் கூட பழைய கருவிகளை ஒதுக்கி வைத்துவிட்டு புதிய கருவிகளை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறது. தோல்விக்கு பின்னர் திமுக மிகப்பெரிய எழுச்சியைபெற்றுள்ளது. எதிர்கட்சியினர் சட்டப்பேரவையில் பேச வாய்ப்பே அளிப்பது கிடையாது.

வருங்காலத்தில் நல்லதொரு சமுதாயம் அமைந்திடவும், தமிழினத்தைகாத்திடவும் நாம் என்றைக்கும் உறுதுணையாக இருந்திடவேண்டும் என்று பேராசிரியர் அன்பழகன் பேசினார். இக்கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, முன்னாள் நகர் மன்றத்தலைவர் ஜனகராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT