இரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்புக்கு வழங்கிய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கடந்த வாரம் தீர்ப்பளித்தது. டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் தனித்தனியாக தொடர்ந்த மனுவை கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரத்தில் பெரும்பான்மையை கருத்தில்கொண்டு, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிக்கு வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
அதேபோன்று கடந்த 28-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். இடைக்காலமாக இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும். தேர்தலைச் சந்திக்கும் விதமாக அமமுகவுக்கு இடைக்காலமாக குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்றும் மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது