திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது செல்லாது என உயர் நீதிமன்றம் அறிவித்தது. தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்கக்கோரும் திமுக வேட்பாளர் மனுவையும் தள்ளுபடி செய்தது.
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிக்கு கடந்த 2016 நவம்பரில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர் பி.சரவணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போதே ஏ.கே.போஸ் இறந்து விட்டார். அதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதை எதிர்த்து டாக்டர் சரவணன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை விரைவாக பிறப்பிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கைக் காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தற்போது இடைத்தேர்தலை தள்ளிவைத்துள்ளது என்றும் முறையீடு செய்தார்.
அதையடுத்து நீதிபதி, ''இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், இடைத்தேர்தலை நடத்தக் கூடாது என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லையே என தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவித்து, வரும் வெள்ளிக்கிழமைக்குள் (இன்று) இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்படும்'' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இன்று நீதிபதி வேல்முருகன், ''கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என உத்தரவிட்டார். வேட்பு மனுவில் கையெழுத்து வைப்பதற்கு மட்டுமே விதிகள் அனுமதிக்கின்ற நிலையில், விதிகளுக்கு முரணாக கைரேகையை அனுமதித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவு தவறானது.
வேட்பு மனுவில் ஜெயலலிதா சுய நினைவோடு தான் கைரேகை வைத்தார் என்பதற்கான நேரடி சாட்சியங்கள் இல்லை. கைரேகைக்கு சான்றளித்த டாக்டர் பாலாஜி மருத்துமனைக்குச் சென்றபோது கூட, ஏற்கெனவே கைரேகை வைக்கப்பட்டிருந்ததாகத்தான் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது. சரவணன் தேர்தல் வழக்கு ஏற்கப்படுகிறது. தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற மனுதாரரான டாக்டர் சரவணனின் கூடுதல் மனுவும் நிராகரிக்கப்படுகிறது'' என தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.