தமிழகம்

பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க துப்பாக்கி தேவை: ஆட்சியரிடம் மனு அளித்த சகோதரிகள்

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி சம்பவம் நாடெங்கும் பரபரப்பை ஊட்டிய நிலையில் கோவையைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் ஆண்களின் பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தாங்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் அளிக்கவேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கோவை நல்லாம்பாளையத்தைச் சேர்ந்தவர் தமிழீழம், இவரது சகோதரி பத்தாம் வகுப்பு படிக்கிறார். தமிழீழம் இன்று  தனது சகோதரியுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

அவர்கள் இருவரும் மனு ஒன்றை ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர். தாங்கள் இருவருக்கும் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கும் வகையில் உரிமம் வழங்கவேண்டும் எனக்கோரி அதிகாரிகளிடம் அவர்கள் மனு அளித்தனர். இதைப்பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கல்லூரி மாணவி  தமிழீழம், பொள்ளாச்சி சம்பவத்தை தொடர்ந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை இருப்பதாகவும், பாலியல் தொல்லைகளிலிருந்து பெண்களை தற்காத்துக்கொள்ள துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும் எனக்கோரி வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர் ஒருவர், ‘‘பொள்ளாச்சி சம்பவம் வேதனையும், விழிப்புணர்வையும் எழுப்பியுள்ளது. ஆனால் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதாக இன்றைய இளைய தலைமுறை இல்லை, மாறாக பரபரப்பாக எதையாவது செய்து பிரபலமாகவே விரும்புகின்றனர்.

துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு வரும் ஒரு பெண்ணுக்கு 18 வயது, இன்னொருவருக்கு 15 வயது இவர்கள் துப்பாக்கி உரிமம் குறித்த எந்த அளவுக்கு தெரிந்து வைத்துள்ளார்கள் என்பது வேதனையாக உள்ளது.

பெண்கள் பாதுகாப்பு குறித்து அனைவரும் கவலைப்படும் நேரம் இது, ஆனால் இதுபோன்ற பரபரப்பை கிளப்புவதால் என்ன லாபம்’’ என்று கேள்வி எழுப்பினார்.

SCROLL FOR NEXT