தமிழகம்

மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கித்தருவதாக மோசடி: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைது; புழல் சிறையில் அடைப்பு

செய்திப்பிரிவு

மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மோகன்ராஜை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கிளினிக் வைத்திருப்பவர் டாக்டர் நிசார் அஹமது. இவர் கடந்த 2013-ம் ஆண்டு தனது மகளுக்கு எம்பிபிஎஸ் சீட்டுக்காக அப்போதைய போக்குவரத்துத் துறை துணை செயலாளரும் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவருமான மோகன்ராஜ் மற்றும் அவரது உதவியாளர் (அரசு உதவியாளர் அல்ல) செல்வகுமார் ஆகியோரிடம் 4 தவணைகளாக ரூ.50 லட்சம் அளித்துள்ளார்.

ஆனால் வாக்குறுதி அளித்தபடி எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தராததால் பணத்தை நிசார் அஹமது திரும்பக் கேட்டுள்ளார். அதற்கு 25 லட்சம் ரூபாய்க்கான 2 காசோலைகளை மோகன்ராஜ் வழங்கியுள்ளார். அந்த இரு காசோலைகளும் பணம் இல்லாமல் திரும்பின. இதையடுத்து டாக்டர் நிசார் அஹமது சென்னை காவல் ஆணையரிடம் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் புகார் அளித்தார்.

இந்நிலையில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால் உயர் நீதிமன்றத்தை நாடினார். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 2015-ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நம்பிக்கை மோசடி,  பண மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் மோகன்ராஜ் மற்றும் செல்வகுமார் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

தங்களுக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி ஐஏஎஸ் அதிகாரி மோகன்ராஜ், செல்வகுமார் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017-ம் ஆண்டு மனுத்தாக்கல் செய்தனர். இம்மனுக்களை உயர் நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், இதுகுறித்த வழக்கில் நீதிமன்றம் ரூ.25 லட்சத்தை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதைச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் மோகன்ராஜ் மற்றும் செல்வகுமார் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை கடந்த 2017 ஜூன் மாதம் மீண்டும் விசாரித்த உயர் நீதிமன்றம் மனுக்களைத் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் நேற்று மோகன்ராஜை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவரது உதவியாளர் செல்வகுமார் மலேசியா தப்பிச் சென்றுவிட்டார். அவரைப் பிடிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

          
SCROLL FOR NEXT