‘எஸ்.ஆர்.பி, மோகன் கந்தசாமி, வி.கே.லட்சுமணன், கார்வேந்தன், விடியல் சேகர், இன்ஜினீயர் ராதா கிருஷ்ணன், தளபதி முருகேசன், குனியமுத்தூர் ஆறுமுகம், மேயர் கோபாலகிருஷ்ணன் என்று வரிசையாக கோவை மேற்கு மண்டலத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் மூப்பனார். அவரின் வாரிசான வாசன், அந்த தனித்தன்மையை மறக்கடித்துவிட்டார். இதனால் இந்த தேர்தலில் விரக்தியடைந்த எங்கள் அணியினர் 90 சதவீதம் பேர், அரசியல் அனாதை யாகிவிடுவோமா என்கிற பயத்தில் ஆர்.பிரபு பக்கம் ஓடிக் கொண்டிருக்கின்றனர்’ என்று புலம்புகின்றனர் கோவையில் உள்ள வாசன் கோஷ்டியினர்.
வாசன் கோஷ்டி நிர்வாகிகள் சிலர் கூறியது:
2002-ம் ஆண்டில் கோவை மாவட்டத்தில் மாநகர், தெற்கு, வடக்கு ஆகிய 3 மாவட்ட கட்சித் தலைவர் பதவிகளும் வாசன் அணியின் தங்கம், ஆறுமுகம், பி.வி.மணி ஆகியோரிடம் இருந்தது.
வாசன் அணி
நீலகிரி, நாமக்கல் மாவட்ட தலைவர்கள் கோபால், இளங்கோ வாசன் அணியை சேர்ந்தவர்களாக இருந்தனர்.
சேலம் மாநகர் தங்கபாலு .ஆதரவாளர் வசம் இருந்தாலும் வடக்கு, தெற்கு மாவட்டங்கள் வாசன் அணியின் சேகரன், தேவதாஸ் வசம் இருந்தது.
கரூர் மாவட்டத் தலைவர் பாங்க் சுப்பிரமணி, வாசன் அணி யிலேயே இருந்தார். இப்படி தமிழக மேற்கு மண்டலத்தில் உள்ள 16 (கட்சி) மாவட்டங்களில் 12 தலைவர் பதவிகள் வாசன் வசமே இருந்தது.
ஆர்.பிரபு அணி
ஆனால், இப்போது நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களிலும் ஆர்.பிரபு அணியினரே தலைவர் பதவிக்கு வந்துள்ளனர். கோவை தெற்கு, வடக்கு தலைவர் பதவிக்கும் பிரபுவின் ஆதரவாளர்களே இறுதிப் பட்டியலில் உள்ளனர். ஈரோட்டின் 3 மாவட்டங்களில் 2 பேர் ஈ.வி.கே.எஸ் அணி; ஒருவர் வாசன் அணி, திருப்பூர் மாநகர், புறநகரில் ஒருவர் ஈ.வி.கே.எஸ் அணி, இன்னொருவர் சிதம்பரம் அணி. கரூர், நாமக்கல் இரண்டு மாவட்டத் தலைவர்களும் சிதம்பரம் அணியினர். சேலம் 3 மாவட்டத் தலைவர்களும் தங்கபாலு ஆதரவாளர்கள். ஆக, மேற்கு மண்டலத்தில் மொத்த முள்ள கட்சி மாவட்டங்கள்
16-ல், 15 பேர் வாசன் அணியைச் சேராதவர்கள்.
கோவை தொகுதியை பொறுத்தவரை ஆர்.பிரபு தான் வேட்பாளர் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. எனவே, பிரபுவின் ஆதரவாளர் மாவட்டத் தலைவர் ஆனதால், தொகுதியில் இப்போதே தேர்தல் பணிகளை ஆரம்பித்துவிட்டனர். 2009, 2011 தேர்தல்களில் இந்த பகுதியில் பிரபுவின் கையே ஓங்கியிருந்ததால் வாசன் ஆதரவாளர்களுக்கு கவுன்சிலர் சீட் கூட கிடைக்கவில்லை. இப்போது மாநில, மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்ட பின்பு விரக்தியின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர்.
இப் பகுதியை சேர்ந்த வாசன் அணியின் எஸ்.ஆர்.பி, கார்வேந்தன் ஆகிய இருவரும் மாநில செயற்குழுவில்
அங்கம் வகித்தாலும், விடியல் சேகர் மாநில பொதுச் செயலாளர்கள் 23 பேரில் ஒருவராக இருந்தாலும், கோவை தங்கம் மாநில பொருளாளராக பதவி உயர்வு பெற்றாலும் இவர்கள் யாரும் வாசன் அணியினரை அக்கறையோடு கவனிப்பதில்லை. அவரவருக்கு அவரவர் பதவியே முக்கியமாக இருக்கிறது. பொருளாளர் பதவி கிடைத்த பிறகு கோவை தங்கம் சென்னையிலேயே இருக்கிறார். அவர் நீலகிரி தொகுதியில் (ரிசர்வ்) சீட் வாங்கிப் போட்டியிட காய்களை நகர்த்துகிறார்.
திரைமறைவு பேரங்கள்
நீலகிரியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியில் பிரபுவுக்கு செல்வாக்கு அதிகம். அவர் தயவு இல்லாமல் சீட் வாங்க முடியாது, ஜெயிக்கவும் முடியாது என்பதால் பிரபுவுக்கு இணக்கமாக நடந்து கொள்வதாக கேள்வி. அதில், திரைமறைவு பேரங்களும் நடந் துள்ளன.
அதனாலேயே, கோவையில் 3 (கட்சி) மாவட்டத் தலைவர் பதவிகளையும் பிரபுவின் ஆதரவாளர்களுக்கு விட்டுக் கொடுக்கும் நிலை ஏற்பட் டுள்ளது. இதை வாசனிடம் எடுத்துச்சொல்லும் நிலையில் மூத்த தலைவர்கள் இல்லை. எனவே வாசன் ஆதரவாளர்கள், பிரபுவிடம் சென்றால் ஏதாவது பதவிகள் கிடைக்கும் என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர், என்றனர்.
இதுகுறித்து கோவை தங்கத்தை தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிக்கு பலன் இல்லை.