கூடா நட்பால் கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவியும் உடந்தையாக இருந்த இளைஞரும் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள கீழ்தாங்கல் கிராமத்தில் வசித்தவர் ஏழுமலை (38). விவசாயியான இவர், லாரி டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். கடந்த ஜூலை மாதம் 19-ம் தேதியில் இருந்து ஏழுமலையை காணவில்லை என்று அவரது தாயார் தனம், போளூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், தனது மகன் காணாமல்போன சம்பவத்தில் மருமகள் சாந்தி (28) மற்றும் பரசுராமன் (30) ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார்.
அவரது புகார் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், உரிய விசாரணை நடத்தவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது மகன் ஏழுமலையை கண்டுபிடித்து தரக்கோரி ஆட்கொணர்வு மனுவை தனம் தாக்கல் செய்தார். அதன்பிறகு, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை யடுத்து சாந்தி, பரசுராமனை அழைத்து வந்து போளூர் போலீஸார் விசாரித்தனர்.
அதில், “அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த கூடா நட்பு காரணமாக, இருவரும் சேர்ந்து ஏழுமலையை கடப்பாரையால் தாக்கியும் கழுத்தை நெறித்தும் கொன்று, அவருக்கு சொந்தமான நிலத்திலேயே உடலை புதைத்துள் ளதாக” கூறியுள்ளனர்.
இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கண்ணகி முன்னிலையில் இருவரும் வாக்குமூலம் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து தாசில்தார் கோபு முன்னிலையில் ஏழுமலை புதைக்கப்பட்ட இடத்தை, கொட்டும் மழையில் போலீஸார் நேற்று தோண்டினர். அங்கு, அழுகிய நிலை யில் ஏழுமலையின் சடலம் இருந் தது. அதனை வெளியே எடுத்து மருத்துவக் குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்தனர்.
இதையடுத்து காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து பரசுராமன், சாந்தி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.