தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழக காவல்துறையிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை முறையாக நடக்கவில்லை என்பதால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (27). அதே பகுதியைச் சேர்ந்த சபரிராஜன் (25), சதீஸ் (28), வசந்தகுமார் (24) ஆகியோருடன் சேர்ந்து சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி இளம் பெண்களை மடக்கி அவர்களைப் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தி அதனை வீடியோவாக எடுத்துள்ளனர். அதைக் கொண்டு அந்தப் பெண்களை மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அவர்களிடம் இருந்து பணம், நகை ஆகியவற்றை பறிப்பதைத் தொழிலாகச் செய்து வந்துள்ளனர்
இந்த கும்பலால் கடந்த 6 ஆண்டுகளில் பொள்ளாச்சியில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் தங்களின் எதிர்காலமே நாசமாகிவிடும் என்ற அச்சத்தில் கடந்த மாதம் வரை எந்தப் பெண்ணும் புகார் தெரிவிக்கவோ, தங்களின் குடும்பத்தினரிடம் பகிரவோ இல்லை.
இதனை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட இந்த கும்பல், தங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி பொள்ளாச்சியில் உள்ள அரசியல் வாதிகள் சிலருக்கு வீடியோவில் உள்ள பெண்களை மிரட்டி அவர்களிடம் அனுப்பி உள்ளனர். அதற்குக் கைமாறாக அவர்களிடமிருந்து பணம் பெற்றதாகப் புகார் எழுந்தது.
கடந்த மாதம் 24-ம் தேதி பொள்ளாச்சியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவியை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி அதனை வீடியோவாக எடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அவர்களிடம் இருந்து தப்பித்து பெற்றோர்களிடம் நடந்த சம்பவத்தைத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதின் பேரில் போலீஸார் சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகியோரைக் கைது செய்தனர். முக்கியக் குற்றவாளி திருநாவுக்கரசு தலைமறைவானார்.
முக்கியக் குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி திமுக, கொமதேக, மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. திருநாவுக்கரசு போலீஸிடம் சிக்கினால் தங்களைக் குறித்த தகவல்களைத் தெரிவித்து விடுவார் என்பதால் திருநாவுக்கரசைக் காப்பாற்ற ஆளுங்கட்சியினர் போலீஸாருக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றனர் என பல்வேறு தரப்பினரால் குற்றம் சாட்டப்பட்டு தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதையடுத்து கடந்த 5-ம் தேதி திருநாவுக்கரசை மாக்கினாம்பட்டியில் வைத்து கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து இளம் பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய 2 செல்போன்களைப் பறிமுதல் செய்தனர்.
திருநாவுக்கரசு பிடிபட்டு இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற உண்மையைச் சொல்லிவிடக்கூடாது என்பதற்காகவே திருநாவுக்கரசைப் பிடிப்பதில் போலீஸார் காலதாமதப்படுத்தி வந்துள்ளனர். இதற்கிடையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர் திருநாவுக்கரசை தொடர்பு கொண்டு அரசியல் கட்சியினர் யாருக்கும் இதில் சம்பந்தம் இல்லை என போலீஸில் கூறுமாறு மிரட்டியுள்ளதாகக் கூறப்பட்டது. இதற்கிடையில் மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் கொடுக்க முன்வந்துவிடக்கூடாது என்பதற்காக போலீஸாருக்கு மட்டுமே கிடைத்துப் பாதுகாக்கப்பட்ட வீடியோக்களில் சில சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
வழக்கில் மேலும் பலர் உள்ளனர் என்கிற கூற்றை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் மறுத்து பேட்டி அளித்ததும், நான்கு வீடியோக்கள் மட்டுமே கிடைத்தது என பேட்டி அளித்ததும், வழக்கு பற்றி யாராவது பேசினால் சட்ட நடவடிக்கை என மிரட்டியதும் எதிர்க்கட்சியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியில் சொல்லக்கூடாது என்பதை மீறி அவரது பெயரை போலீஸார் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் போலீஸார் வசம் உள்ள பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்கள் எப்படி வெளியானது என்கிற கேள்வியையும் வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் போன்றோர் முறையாக மாவட்ட எஸ்.பி.பாண்டியராஜன் வழக்கை கொண்டு செல்லவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் மாவட்ட காவல்துறை அப்பகுதியில் உள்ள அரசியல்வாதிகளைக் காப்பற்றலாம். இதன் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் மேலும் பலர் உள்ளனர், இந்த வழக்கை பல ஆண்டுகள் பின்னோக்கி உள்ள புகார்களின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து முறையாக விசாரணை நடைபெற வேண்டுமானால் சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றப்படவேண்டும் என்றும், பெண் அதிகாரிதான் இதை விசாரிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
பொள்ளாச்சி பாலியல் கொடுமை விவகாரம் தமிழகத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். விரைவில் பெண் எஸ்.பி. தலைமையில் விசாரணை தொடங்கும் எனத் தெரிகிறது.