பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில், கைதான 4 பேரின் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுமார் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி, பாலியல் தொந்தரவு கொடுத்து, அதை வீடியோவாக எடுத்து மிரட்டியதாக, திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு குறித்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த, மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன், கைதான திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யக் கோரினார். இதையடுத்து, 4 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டார்.