தமிழகத்தில் மைனஸில் இருந்த பாஜக தற்போது பூஜ்ஜியத்துக்கு உயர்ந்துள்ளது என்று கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இல.கணேசன் சமீபத்தில் சென்னை திரும்பினார். இந்நிலையில் தமிழகத்தில் பாஜகவின் எதிர்காலம், இலங்கை பிரச்சினை போன்ற பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பிரத்தியேக பேட்டி:
மோடியின் அமெரிக்க பயணம் இந்தியாவில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முழுக்கவனம் செலுத்தி வரும் மோடி, உலக அரங்கில் இந்தியா உற்பத்தி மையமாக வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் மோடியின் இந்த பயணம் இந்தியா - அமெரிக்கா இடையேயான தொழில் மற்றும் பொருளாதார ரீதியான உறவுகளை வலுப்படுத்தும்.
அமீத் ஷா அமைத்துள்ள புதிய அணியில் உங்களைப்போன்ற சீனியர்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளார்களே?
இதை புறக்கணிப்பு என்று சொல்ல முடியாது. எனக்கு பதவி வேண்டும் என்று நான் ஒருபோதும் கேட்டதில்லை. நான் எப்போதும் தொண்டர்களுடனேயே இருந்து களப்பணியாற்றி வருகிறேன். மேலும் அத்வானி இல்லாமல் பாஜகவே கிடையாது. அப்படி யிருக்கும் போது அவர் வழிகாட்டி குழுவில் இருப்பதுதான் அவருக் கான அங்கீகாரமாகும்.
கர்நாடக வாக்கு வங்கியை மனதில் வைத்தே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் பாஜக அரசு இழுத்தடிப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
இமயம் முதல் குமரி வரை எல்லோரும் ஒரே மக்கள் என்ற உணர்வில்தான் நாங்கள் உள்ளோம். காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 20 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் அடைந்த உயரத்தை பாஜக இன்னும் எட்டவில்லையே?
வெளிமாநிலங்களில் நாங்கள் பூஜ்யத்திலிருந்து ஆரம்பித்து ஆட்சியதிகாரம் வரை சென்று விட்டோம். தமிழகத்தில் தேசிய எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு என நிறைய மாயையான விஷயங் கள் இருந்தன. இதனால் எங்களை வடநாட்டு கட்சியாகவே பார்த்தார்கள். அதனால் நாங்கள் மைனஸிலிருந்து ஆரம்பித்து தற்போதுதான் பூஜ்யத்துக்கு வந்துள்ளோம். மக்களுக்கு இப்போதுதான் எங்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே இனி எங்கள் கட்சி தமிழகத்தில் வளரும்.
சட்டமன்ற தேர்தல்வரை தமிழகத்தில் தே.ஜ கூட்டணி நீடிக்குமா?
இன்றைய தேதிவரை எங்கள் கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. எதிர்கால நிலைமை குறித்து இப்போது கூற முடியாது.
ரஜினிகாந்த் பாஜகவுக்கு வருகிற மனநிலையில் உள்ளாரா?
அவர் பாஜகவில் இணைகிறார் என்று செய்திகள் பரவியது. இதுகுறித்து பாஜகவின் மாநில நிர்வாகிகளில் ஆரம்பித்து தேசிய அளவிலுள்ள நிர்வாகிகள் வரை விசாரித்துவிட்டேன். ஆனால் ரஜினியை யார் பார்த்தார்கள் என்ன பேசினார்கள் என்பது யாருக்கும் தெரியவேயில்லை. ரஜினிக்கு இந்த விஷயத்தில் ஏதோ தயக்கம் உள்ளதாக தெரிகிறது.