பொன்முடி மகன் கவுதம் சிகாமணியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிறகு கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குள் வரும் ஆத்தூரில் திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார் உதயநிதி ஸ்டாலின்.
இன்று கடும் வெயில் கொளுத்தியதால் திறந்தவெளி வேன் பிரச்சாரம் உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் வியர்வையை உருவாக்கிக் கொண்டிருந்தது.
இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினின் வியர்வையை வேனில் அருகில் இருந்த வேட்பாளர் கவுதம் சிகாமணி துண்டால் துடைத்து விட்டபடியே இருந்தார்.
தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இம்முறை திமுக போட்டியிடும் 20 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி ஆகியவற்றுக்கு நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். இந்தப் பயணத்தை மார்ச் 21-ம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். அங்கிருந்து தொடங்கப்படும் உதயநிதியின் பிரச்சாரப் பயணம் ஏப்ரல் 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.