பிரபல நடிகை வடிவுக்கரசியின் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். போலீஸார் திருடிய நபரைத் தேடி வருகின்றனர்.
வடிவுக்கரசி 1980-களில் 'கன்னிப்பருவத்திலே' படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கினார். பின்னர் பல்வேறு பாத்திரங்களில் நடித்தார். தாய், சகோதரி, அண்ணி, பாட்டி என எல்லா கதாபாத்திரங்களிலும் முத்திரை பதித்தார். தற்போது சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள் என தொடர்ந்து நடித்து வருகிறார்.
தி.நகர் வெங்கட்ராமன் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வடிவுக்கரசி வசித்து வருகிறார். இவரது மகள் வீடு தி.நகரிலேயே இன்னொரு பகுதியில் உள்ளது. கடந்த 10-ம் தேதி வடிவுக்கரசி வீட்டைப் பூட்டி விட்டு தனது மகள் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில் குடியிருப்பின் காவலாளி நேற்று இரவு பணிக்கு வந்தபோது மாடியில் உள்ள அறையில் விளக்கு எரிவதைப் பார்த்துள்ளார். உடனே நடிகை வடிவுக்கரசியின் சகோதரர் அறிவழகனைத் தொடர்பு கொண்டு ஆளில்லா வீட்டில் விளக்கு எரிவது பற்றி தெரிவித்துள்ளார்.
அறிவழகன் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக வடிவுக்கரசியின் புகாரின் பேரில் பாண்டிபஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.