உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது முடிவை இன்று அறிவிக்கிறார்.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு வரும் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலை திமுக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை கலந்தாலோசித்துவிட்டு தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக உரிய அறிவிப்பை வெளியிடுவோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார். இதன்படி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை செவ்வாய்க்கிழமை அவர் சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக ‘தி இந்து’விடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளது. மாநகராட்சி மேயர் மற்றும் நகர்மன்ற தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர், சம்பந்தப்பட்ட பகுதி களுக்கு சென்று கட்சியினரிடம் கருத்து கேட்டு, புதன்கிழமை (இன்று) தலைமைக்கு தெரிவிப்பர். மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை சந்தித்துப் பேசினோம்.
எனது கோரிக்கையை ஏற்று பாஜக வேட்பாளர்களை மதிமுக ஆதரிக்கும் என்று வைகோ கூறினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது முடிவை புதன்கிழமை (இன்று) அறிவிப்பதாக கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸையும் சந்தித்துப் பேசுவோம்.
இவ்வாறு தமிழிசை கூறினார்.
இதற்கிடையே, உள்ளாட்சி மன்றங்களின் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.