ரஃபேல் விமானம் கொள்முதல் செய்ய முடியாததற்கு பிரதமர் மோடி தான் காரணம் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கே.எஸ். அழகிரி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பாலகோட் பகுதியில் முகாமிட்டிருப்பதாக கூறப்பட்ட தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட விமானப்படை தாக்குதல் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருவது மிகுந்த கவலையைத் தருகிறது.
இத்தகைய தாக்குதல் என்பது தீவிரவாதிகளுக்கு எதிராகவே நிகழ்த்தப்பட்டது. இதை இந்திய விமானப்படை மிகச் சிறப்பாக கையாண்டு அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறது. இந்த வீரமிகு சாதனை நிகழ்த்தியதற்காக தமிழகத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் உள்ளிட்ட அனைவரையும் நாடே பாராட்டி மகிழ்கிறது. இதில் அரசியல் பாகுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒருமித்த குரலில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கையை வரவேற்றிருக்கிறார்கள்.
குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்திய - பாகிஸ்தான் நாடுகளிடையே இத்தகைய தாக்குதல் மூலம் உருவாகி வருகிற பதற்றமான நிலையில் கூட அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி முன்வராதது மிகுந்த வேதனையைத் தருகிறது. இத்தகைய தாக்குதலை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டு வருவது அனைவரது கண்டனத்தையும் பெற்று வருகிறது.
குறிப்பாக, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா இத்தகைய தாக்குதலினால் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 28 இடங்களில் 22-ல் பாஜக வெற்றி பெறும் என்று கூறியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. அதேபோல, பாஜக தலைவர் அமித் ஷா வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் பாகிஸ்தானுக்குப் பாடம் புகட்டுகிற வகையில் தீர்ப்பளிப்பார்கள் என்று கூறியிருக்கிறார். பாஜக அரசு நடத்திய தீவிரவாதிகள் மீது நடத்திய தாக்குதல் குறித்து இத்தகைய பேச்சுகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன.
மேலும், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலினால் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் 300 பேர் கொல்லப்பட்டதாக ஒரு செய்தியை பாஜக அரசுக்கு ஆதரவாக உள்ளவர்கள் ஊடகங்கள் மூலம் திட்டமிட்டுப் பரப்பி வருகிறார்கள். இதனால் பாஜகவுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.
ஆனால், இந்தக் கூற்றை இந்தியப் பத்திரிகையாளர்களும், குறிப்பாக வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் கடுமையாக மறுத்து வருகிறார்கள். இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலினால் எத்தகைய பாதிப்பும் ஏற்படவில்லை என்று பத்திரிகை உலகம் மறுத்து வருகிறது. இதில் எது உண்மை என்று மக்களிடையே பலத்த சந்தேகம் எழுந்து வருகிறது.
ஆனால், தாக்குதலுக்கான ஆதாரத்தைக் கேட்க வேண்டுமென்பது காங்கிரஸ் கட்சியின் நோக்கமல்ல. ஆனால், அதேநேரத்தில் இத்தகைய சந்தேகங்களுக்கு இடம் தராத வகையில் பிரதமர் நரேந்திர மோடி நடந்து கொள்ள வேண்டுமென்று நாடு எதிர்பார்க்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி அமேதியில் உரையாற்றும் போது ரஃபேல் விமானங்கள் இந்தியாவிடம் இருந்திருந்தால் தாக்குதலின் முடிவுகள் வேறுவிதமாக இருக்கும் என்று பேசியிருக்கிறார். மார்ச் 2014 இந்திய அரசு ரஃபேல் விமான கொள்முதல் குறித்து போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, புதிய ஒப்பந்தம் போட்டதினால் கடந்த நான்கே முக்கால் ஆண்டுகளாக ரஃபேல் விமானம் கொள்முதல் செய்ய முடியாததற்கு பிரதமர் மோடி தான் காரணமே தவிர, காங்கிரஸ் கட்சி அல்ல. பிரதமர் பொறுப்பில் இருப்பவர்கள் இத்தகைய உள்நோக்கம் கொண்ட பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது" என, கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.