தேமுதிக நிர்வாகிகள் தன்னை சந்தித்ததாகவும், தான் இடமில்லை என தெரிவித்து விட்டதாகவும் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணியின் போட்டியை பயன்படுத்தி அதிக தொகுதிகளை பாமக, தேமுதிக அறுவடை செய்து வந்தது. இதில் பாமக 7 தொகுதிகளை பெற்றுவிட தேமுதிக இரண்டுப்பக்கமும் பேசி இழுத்து வந்தது.
இறுதியாக நேற்று திமுக கதவை சாத்தியது. இந்நிலையில் இன்று அதிமுக பேசிவந்த நிலையில் திடீரென பேச்சுவார்த்தை முறிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரதமர் பங்கேற்ற மேடையிலிருந்த விஜ்யகாந்த் படம் அகற்றப்பட்டது.
இந்நிலையில் திமுகவுக்கு மீண்டும் தூதுவிட்டது தேமுதிக. அவர்கள் அணியினர் துரைமுருகனை நேரில் சந்திக்க அவருடன் சுதீஷும் தொலைபேசியில் பேசியுள்ளார். ஆனால் திமுக அவர்களுக்கு கைவிரித்து விட்டது. இதன்மூலம் தேமுதிக நிலை திரிசங்கு நிலையாகிவிட்டதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
துரைமுருகனிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது.
தேமுதிக உங்களிடம் கூட்டணி குறித்து மீண்டும் பேசினார்களா?
ஆமாம் சுதீஷ் என்னிடம் தொலைபேசியில் பேசினார். திமுகவுடன் பேச விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் இனி கொடுக்க இடமில்லை எல்லாம் முடிந்துவிட்டது என்று தெரிவித்தேன்.
தேமுதிக நிர்வாகிகள் உங்களைச் சந்தித்த காரணம் என்ன?
தெரியவில்லை, ஆனால் அவர்களுக்கு கொடுக்க கட்சியில் இடமில்லை எல்லோரும் ஒப்பந்தம்போட்டு கையெழுத்துப்போட்டு வீட்டுக்கு போய்விட்டார்கள். இனி எங்கே இடம் இருக்கிறது.
ஸ்டாலினிடம் பேசினீர்களா?
அவர் ஊரில் இல்லை, போன் செய்தேன். தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக போனில் சொன்னது. பின்னர் தொடர்புக்கொண்டு கேட்டபோது அவர் உறங்குவதாக கூறினார்கள்.ஏதும் முக்கிய விஷயமா என்று கேட்டார்கள். ஒன்றுமில்லை என்று கூறிவிட்டேன்.
மேலும் கொடுப்பதற்கு இடமும் இல்லை.
தேமுதிக நிர்வாகிகள் உங்களைச் சந்தித்தது கட்சியில் இணையவா?
அது கட்சியில் இணைவது எல்லாம் அப்புறம். கூட்டணிக்கு பேச கொடுப்பதற்கு இடமில்லை அவ்வளவுதான் தற்போதைய நிலை.
நீங்கள் அதிமுகவிடமிருந்து விலகி வருகிறீர்களே முடிவெடுத்துத்தான் வருகிறீர்களா? என்று கேட்டேன். இந்த முடிவு உங்கள் தலைவர் விஜயகாந்துக்கு தெரியுமா? என்று கேட்டேன். உங்கள் கவுரவத்துக்கு கொடுக்கும் அளவுக்கு எங்களிடம் சீட்டு இல்லையே என்று சொன்னேன்.
இருக்கும் சீட்டை அனைவருக்கும் பங்குப்போட்டு கொடுத்துவிட்டோம், இருக்கும் சீட்டை கொடுக்க முடியாது. இதற்குமேல் தலைவர் ஸ்டாலின்தான் முடிவெடுக்கவேண்டும் என தெரிவித்தேன்.
இப்போது பார்த்தால் திடீரென சுதீஷ் நாங்கள் அதிமுகவுடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்கிறார். இவர்களை நம்பி எப்படி முடிவெடுப்பது. முதலில் அவர்கள் ஒரு முடிவுக்கு வரவேண்டும். இதுதான் அவர்கள் பிரச்சினை.
இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.