இந்திய ஊடகங்களும், அரசியல்வாதிகளும்தான் எண்ணிக்கை விளையாட்டு விளையாடுகின்றனர்: மீண்டும் நடிகர் சித்தார்த் ட்வீட்
புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் ராணுவ வீரர்கள் பலியான நாட்டை உலுக்கிய சம்பவம் முதல் தற்போது பாலகோட் தாக்குதல் வரை தொடர்ந்து அரசியல் ட்வீட்களை வெளியிட்டு வரும் நடிகர் சித்தார்த், பொதுவாக தாக்குதல் பற்றி பலி எண்ணிக்கை கணக்குகளை வெளியிடுபவர்கள் ஊடகங்களும், அரசியல்வாதிகளுமே என்று இன்னொரு சாடலைத் தொடுத்துள்ளார்.
உதாரணமாக பாலகோட் தாக்குதலில் தீவிரவாதிகள் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற பிரச்சினை தற்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, ஊடகங்களின் பேசுபொருளாகியுள்ளது. அமித் ஷா 250க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி என்றார், சில ஊடகங்கள் தரப்பில் 350 என்று தகவல் வெளியானது, இந்நிலையில் ராஜ்நாத் சிங், ''எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று சிலர் கேள்வி கேட்கின்றனர். இந்தியாவின் மரியாதைக்குரிய மற்றும் நம்பகமான தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (தொழில்நுட்ப ரீதியிலான தகவல்களை அளிக்கும் உளவுப்பிரிவு) பாலகோட் தீவிரவாத முகாமில், 300 மொபைல் போன்கள் உபயோகத்தில் உள்ளதாகச் சொன்னது. இந்திய விமானப் படை, குண்டுகளை வீசும் முன்பு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைக்கொண்டுதான், பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினோம்'' என்றார்.
இந்தக் கணக்கு விவகாரம் இன்னும் முடிவுறாத நிலையில் நடிகர் சித்தார்த் தன் ட்விட்டர் பக்கத்தில், “ராணுவப்படையினர் பலி எண்ணிக்கையை கணக்கிடுவதில்லை. இந்திய ஊடகங்களும், இந்திய அரசியல்வாதிகளும்தான் இதைச் செய்கின்றனர். இவர்கள்தான் எண்ணிக்கை குறித்து சப்தமிடுகின்றனர். ராணுவத்தினரை நம்புங்கள். ஊடகங்களையோ, அரசியல்வாதியையோ நம்பாதீர்கள்.
தேசப்பற்றுடன் இருங்கள். கேள்விகள் கேளுங்கள், தெரிந்து கொள்வதற்கான தகுதி நமக்கு உண்டு. எந்த ஒரு தலைவரும் இதனை மறக்க அனுமதிக்காதீர்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.