முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்று வரும் 7 பேர் மீதும் எந்தவிதமான வெறுப்பும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று சென்னை வந்திருந்தார். சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது மாணவிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் காந்தி சளைக்காமல் பதில் அளித்தார்.
அப்போது ஒரு மாணவி ராகுல் காந்தியிடம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலைக்கான நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு ராகுல் காந்தி பதில் அளிக்கையில், "கடந்த 1991-ம் ஆண்டு என்னுடைய தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி இரு நோக்கத்துக்காக கொல்லப்பட்டார். முதலாவது தனிப்பட்ட காரணங்களுக்கானது. அதை நாங்கள் சந்தித்து வருகிறோம். இரண்டாவது சட்டரீதியானது. சட்டரீதியான விஷயங்கள் நடப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
குற்றவாளிகள் 7 பேரையும் நாங்கள் முழுமையாக மன்னித்துவிட்டோம். எந்தவிதமான வெறுப்பும், விரோதமும் யார் மீதும் இல்லை. அவர்கள் விடுதலை குறித்து நீதிமன்றம் முடிவு செய்யட்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவது அவசியம். அதுதான் சிறந்தது" எனத் தெரிவித்தார்.