இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த விபத்துகள், உயிரிழப்புகளின் விவரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் நத்தம் சாலை மற்றும் பழங்காநத்தம் சாலையில் பறக்கும் மேம்பாலங்கள் கட்ட தடை விதிக்கக்கோரி இருளாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் இந்த பறக்கும் பாலங்களால் மக்களுக்கு பயனில்லை. பொதுமக்களின பணம் தான் வீணாகிறது எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த விபத்துகள் எத்தனை? அந்த விபத்துகளில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்? காயமடைந்தவர்கள் எத்தனை பேர்? என்பது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.