தமிழகம்

நீதிமன்றத்துக்கு வரும் கைதிகளுடன் வழக்கறிஞர்கள் பேசக்கூடாது: எழும்பூர் நீதிமன்ற நடுவர் சுற்றறிக்கை

செய்திப்பிரிவு

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் கைதிகளுடன் வழக்கறிஞர்கள் பேசக்கூடாது என எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர், வழக்கறிஞர் சங்கங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சமீபத்தில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட குற்றவாளியை வழக்கறிஞர் தொட்டுப் பேசுவதற்கு பாதுகாப்புக்கு வந்த போலீஸார் ஆட்சேபித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸாரை மிரட்டியதாக வழக்கறிஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து நீதித்துறை நடுவர் இரு தரப்பையும் அழைத்துப் பேசி தீர்வை ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்போது சுற்றறிக்கை ஒன்று அனைத்து வழக்கறிஞர் சங்கங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ''சிறையில் உள்ள கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரும்போது நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுடன் பேசக்கூடாது. கைதிகளிடம் பேச விரும்பும் வழக்கறிஞர்கள் கைதி இருக்கும் சிறைக்குச் சென்று சிறைத்துறை அதிகாரிகளிடம் உரிய அனுமதியைப் பெற்று மட்டுமே பேச வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நீதிமன்றத்திற்கு வரும் குற்றவாளிகளிடம் பேசலாம் என்ற நடைமுறை இருந்தது.  இவ்வாறு பேசுவதால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும், குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டதையும் கருத்தில் கொண்டு இந்த சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT