புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இந்திய துணை ராணுவப் படையினரின் வாகன அணிவகுப்பு மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 41 வீரர்கள் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது துயரத்தையும், வேதனையையும் அதிகரித்துள்ளது.
காஷ்மீரின் ஜம்மு நகரிலிருந்து 2,500 மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றிக்கொண்டு 70 வாகனங்கள் ஸ்ரீநகருக்கு சென்று கொண்டிருந்தபோது, புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நகரின் லேத்போரா பகுதியில், அந்த வாகனங்கள் மீது 350 கிலோவுக்கும் கூடுதலான வெடிமருந்து ஏற்றப்பட்ட வாகனத்தை மோத வைத்து இந்தத் தாக்குதலை தீவிரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர். இத்தாக்குதலில் தாக்கத்தை அங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீநகரிலும் உணர முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 45 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்திருக்கின்றனர்.
புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட 45 பேரில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. அவர்களில் ஒருவர் நெல்லை மாவட்டம் சீவலப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (27) என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரச்சாவு அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட 41 வீரர்களுக்கும் பாமக சார்பில் வீரவணக்கம் செலுத்துகிறேன். அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல் இதுதான் என்று கூறப்படுகிறது. தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்திய இளைஞர் தவிர மேலும் பல தீவிரவாதிகள் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கும், இந்திய மக்களவைக்கும் விரைவில் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் தான் பாகிஸ்தான் ஆதரவுடன் அந்நாட்டு பயங்கரவாத அமைப்புகள் இக்கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளன.
இந்தியாவில் அமைதியை சீர்குலைக்கவும், குழப்பத்தை ஏற்படுத்தவும் முயன்றதற்காக பாகிஸ்தானுக்கு பல்வேறு தருணங்களில் இந்தியப் படைகள் பாடம் புகட்டியுள்ளன. அதற்குப் பிறகும் இதுபோன்ற தீவிரவாதத் தாக்குதல்களை பாகிஸ்தான் ஊக்குவித்து வருவது கண்டிக்கத்தக்கது. இனிவரும் காலங்களில் இத்தகைய தாக்குதல்கள் நடக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.
அதுமட்டுமின்றி, இனி வரும் காலங்களில் இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவது குறித்தோ, ஊக்குவிப்பது குறித்தோ நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பாகிஸ்தானுக்கு ராணுவ அளவிலும், ராஜிய அளவிலும் கடுமையான பாடம் புகட்டப்பட வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.