தமிழகம்

டிக்டாக்கில் பழகி சிறுமியை கடத்திய இளைஞர்: போக்சோ சட்டத்தில் சிறையிலடைப்பு

செய்திப்பிரிவு

டிக்டாக் ஆப் மூலம் பழகி சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற வாலிபரை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

டிக்டாக் மோகம் இன்று இளைய தலைமுறையினரை ஆட்டிப்படைத்து வருகிறது. திரைப்படப் பாடலுக்கு நடனம் ஆடி, வசனம் பேசி, நடித்து, டூயட் பாடி வெளியிடப்படும் டிக்டாக் காணொலிகளுக்கு ஆட்களுக்கு ஏற்றார்போல் பின்பற்றுபவர் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் இருக்கும்.

இதில் தனியாக இன்பாக்ஸில் பேசவும் வாய்ப்புள்ளதால் சம்பந்தப்பட்டவர்களை தொடர்புக்கொள்ளவும் முடியும். இதுபோன்ற காணொலிகளை வெளியிடும் இளம்பெண்களை தொடர்புக்கொண்டு சினிமா ஆசைக்காட்டி ஏமாற்றும் ஆட்களும் தற்போது அதிகரித்துள்ளனர்.

சென்னை, கோயம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (45), இவரது 17 வயது மகளை சினிமாவில் நடிக்க வைக்க முயற்சி எடுத்து வருகிறார். இதற்காக பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ள இம்ரான்கான் என்கிற சினிமா டைரக்டரிடம் நடிப்பு பயிற்சி பெற அனுப்பியுள்ளார்.

வழக்கம்போல் கடந்த சனிக்கிழமை (02.02.2019) காலை தனது மகளை, நடிப்பு பயிற்சிக்காக பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தந்தை ராஜா இறக்கிவிட்டு சென்றுள்ளார். இரவு 7.30 ஆகியும் தனது மகள் வீடு திரும்பததால், ராஜா டைரக்டர் இம்ரான்கானிடம்  போன் செய்து கேட்டுள்ளார்.

உங்கள் மகள் மதியம் 1.00 மணியளவில் பயிற்சி வகுப்பு முடித்து வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறியுள்ளார். இந்நிலையில் சிறுமி தனது ஆசிரியருக்கு, ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில் தான் ஒருவரை விரும்புவதாகவும், அவரை திருமணம்  செய்து கொள்வதற்காக காதலனுடன் செல்வதாகவும் அனுப்பியுள்ளார்.

இதனைப் பார்த்த டைரக்டர் இம்ரான்கான், உடனடியாக சிறுமியின் தந்தையிடம் இதுப்பற்றி கூறியுள்ளார்.  இது தொடர்பாக சிறுமியின் தந்தை ராஜா வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து தனது மகள் 17 வயது சிறுமி அவரை மீட்டுக்கொடுங்கள் என கேட்டுள்ளார். போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.

வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியை தேடிவந்த நிலையில் சிறுமி தன்னுடைய காதலனுடன் ஈ.சி.ஆர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது. அங்குச் சென்ற  போலீஸார் சிறுமி மற்றும் அவரது காதலன் திருவேற்காடு, ஈஸ்வரன் நகரைச்சேர்ந்த தயாளன் (31) ஆகிய இருவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் சிறுமி டிக்-டாக் செல்போன் செயலி மூலம் அறிமுகமான  மருந்து விற்பனை பிரதிநிதி தயாளனை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார். தயாளன் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளது தெரியவந்தது. அதன் பேரில் சிறுமியை ஆசை வார்தை கூறி அழைத்து சென்ற தயாளனை போலீஸார்  கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தயாளன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT