தமிழகம்

ஆனந்த் டெல்டும்டே கைது: சுதந்திர இந்தியாவில் சிந்தனையாளர்களுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல்; திருமாவளவன் கண்டனம்

செய்திப்பிரிவு

சமூகச் செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "உலகறிந்த சிந்தனையாளரான ஆனந்த் டெல்டும்டே இன்று அதிகாலை மும்பை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இருக்கிறார். பிப்ரவரி 11 ஆம் தேதி வரை அவரைக் கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் இன்று மகாராஷ்டிரா போலீஸ் அவரைக் கைது செய்திருக்கிறது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய அரசு உடனே இதில் தலையிட்டு அவர் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்யவும், அவரை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

பீமா கோரேகான் நினைவு நாளின்போது நடந்த வன்முறைகளுக்கு காரணமான சனாதன பயங்கரவாத அமைப்புகளைச் சார்ந்தவர்களை இதுவரை மகாராஷ்டிர போலீஸ் கைது செய்யவில்லை. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு அதை கிடப்பில் போட்டு விட்டது. ஆனால் பீமா கோரேகானுக்கு அருகில் நடத்தப்பட்ட எல்கார் பரிசத் விழாவோடோ, அதன் பிறகு நடந்த வேலை நிறுத்த போராட்டத்தோடோ கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஆனந்த் டெல்டும்டேவை கைது செய்திருப்பது மகாராஷ்டிர பாஜக அரசின் தலித் விரோத போக்கையே காட்டுகிறது.

சுதந்திர இந்தியாவில் சிந்தனையாளர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய தாக்குதலாக தற்போதைய மகாராஷ்டிர பாஜக அரசின் இந்தத் தாக்குதலே அமைந்துள்ளது. இது அனைவராலும் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். 

ஆனந்த் டெல்டும்டேவை உடனே விடுதலை செய்ய வேண்டும் என இந்தியா முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள், அறிவுஜீவிகள் குரல் எழுப்பி வருகின்றனர். உலக அளவில் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், சிந்தனையாளர்களும் அவருக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இவற்றைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் முதன்மையான எதிர்க்கட்சியாக விளங்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் ஆனந்த் டெல்டும்டேவை விடுதலை செய்ய வேண்டும் என மகாராஷ்டிர பாஜக அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்" என, திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT