தனிநபர், வேலையாட்கள், வாடகைதாரர் போன்றவற்றுக்கான சரிபார்ப்பு கோரி விண்ணப்பிக்க போலீஸாரால் அறிமுகப்படுத்தப்பட்ட இணையவழி சரிபார்ப்பு கோரும் முறைக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
காவல் முன்நடத்தை சரிபார்ப்பு சேவை என்ற ஒரு புதிய இணையவழிச் சேவையினை தமிழக காவல்துறையால் கடந்த ஜனவரி 9-ம் தேதி முதல் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ் நாட்டில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பின்வரும் சேவைகளுக்காக விண்ணப்பித்துப் பயன்பெற்று வருகின்றனர்.
1. தனிநபர் விவரம் சரிபார்ப்பு
2. வேலை நிமித்தமான சரிபார்ப்பு
3. வாடகைதாரரின் விவரம் சரிபார்ப்பு
4. வீட்டு வேலையாட்கள் விவரம் சரிபார்ப்பு
காவல் சரிபார்ப்பு அறிக்கை பெறுவதற்கு தனிநபர் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.1000 எனவும், தனியார் நிறுவனங்கள் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.3000 எனவும் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்தது. தற்போது, இணையவழியில் மேற்படி சேவையினை செயல்படுத்தும் நிலையில், காவல் சரிபார்ப்பு சேவைக்கான கட்டணத்தினை குறைத்து தனி நபர் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.500 மற்றும், தனியார் நிறுவனங்கள் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.1000 வீதமும் கட்டணம் செலுத்தும் வகையில் அரசாணை பெறப்பட்டு கடந்த ஜனவரி 9-ம் தேதி முதல் செயல்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக, மேற்படி திட்டம் செயல்படுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே தமிழகம் முழுவதிலுமுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து 8,901 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அதில் 8,578 விண்ணப்பங்கள் தனிநபர் விவரம் சரிபார்ப்பிற்காகவும், 296 விண்ணப்பங்கள் வேலை நிமித்தமான சரிபார்ப்பிற்காகவும், 12 விண்ணப்பங்கள் வாடகைதாரர் விவரம் சரிபார்ப்பிற்காகவும் மற்றும் 15 விண்ணப்பங்கள் வீட்டு வேலையாட்கள் விவரம் சரிபார்ப்பிற்காகவும் பெறப்பட்டுள்ளன.
சராசரியாக நாள் ஒன்றுக்கு 300 விண்ணப்பங்கள் மேற்படி சேவைக்காக பெறப்படுகின்றன. அதிகபட்சமாக சென்னையிலிருந்து 1,848 விண்ணப்பங்களும், கடலூரிலிருந்து 667 விண்ணப்பங்களும், கன்னியாகுமரியிலிருந்து 625 விண்ணப்பங்களும், வேலூரிலிருந்து 525 விண்ணப்பங்களும், காஞ்சிபுரத்திலிருந்து 521 விண்ணப்பங்களும் மற்றும் திருநெல்வேலியிலிருந்து 424 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. மேற்படி பெறப்பட்ட விண்ணப்பங்களுள் அதிகபட்சமாக 15 நாட்களுக்குள் 99.5 சதவிகித விண்ணப்பங்களுக்கான விவரங்கள் சரிபார்க்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளன.
எஞ்சிய 0.5 சதவிகித விண்ணப்பங்கள் மனுதாரர்கள் ஊரில் இல்லாத காரணத்தினாலோ அல்லது அவர்தம் இருப்பிட முகவரி முழுமையாக இல்லாமையாலோ நிலுவையில் உள்ளன. மிக குறைந்த கட்டணம் நிர்ணயத்துள்ளபடியாலும், பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமின்றி, இணையவழியில் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் காவல் முன்நடத்தை சரிபார்ப்பு அறிக்கை பெறுவதாலும், மேற்படி இணையவழிச் சேவையானது பொதுமக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தது.