தமிழகம்

11 மாவட்டங்களில் மழை பற்றாக்குறை: கோவை, தேனி, சென்னைக்கு அதிகம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் இதுவரை 11 மாவட்டங்களில் குறைவாகவும் 6 மாவட்டங்களில் அதிகமாகவும் தென்மேற்கு பருவ மழை பெய்துள்ளது.

கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை பதிவான மழை நிலவரப்படி தமிழகத்தில் அரியலூர், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி ஆகிய 11 மாவட்டங்களில் மழை குறைவாக பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் 59 சதவீத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அடுத்தபடியாக திருச்சியில் 45, நாமக்கலில் 36, மதுரையில் 28 சதவீதம் பற்றாக்குறையாக மழை பெய்துள்ளது.

ஆனால் சென்னை, கோவை, நீலகிரி, பெரம்பலூர், தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை அதிகமாக பெய்துள்ளது. கோவை மாவட்டத்தில் அபரிமிதமாக பெய்த மழையின் காரணமாக அங்கு சராசரியைவிட 397 சதவீதம் அதிகமாக, அதாவது 618.2 மி.மீ. மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக தேனியில் 170, பெரம்பலூரில் 38, சென்னையில் 21 சதவீத மழை அதிகமாக பெய்துள்ளது.

தென்மேற்கு பருவமழை முடிய இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் மழை அளவு அனைத்து மாவட்டங்களிலும் குறைந்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் எங்கும் கன மழை பெய்ய வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT