தமிழக நிதிநிலை அறிக்கை மாநில மக்களின் நலனுக்கோ, வளர்ச்சிக்கோ உதவும் நோக்கம் எதுவும் இல்லாத வெற்றுக் காகித தொகுப்பாக உள்ளது என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மக்களின் எதிர்பார்ப்புகள் எதனையும் பிரதிபலிக்கவில்லை. அரசுத் துறைகளின் நடைமுறை வேலைகளின் விபரத் தொகுப்பாகவே நிதியமைச்சரின் உரை அமைந்திருக்கிறது. சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதை சாதனையாக காட்டும் நிதிநிலை அறிக்கை ஒரு கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் வேலை தேடி வருவோருக்கு 'கானல் நீரை' காட்டி தாகம் தீர்ப்போம் என்கிறது.
நலவாரியங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தொழிலாளர் எண்ணிக்கையை மட்டுமே தெரிவிக்கும் நிதிநிலை அறிக்கை ஒப்பந்தத் தொழிலாளர் முறையை நீக்குவது பணி நிரந்தரம் செய்வது, பணி வரன்முறை செய்வது, சமவேலைக்கு சமஊதியம் வழங்குவது,பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்து போன்ற தொழிலாளர் கொள்கையில் அரசு திவாலாகிவிட்டதை வெளிப்படுத்தியுள்ளது.
மாநில அரசின் கடன் சுமை ரூபாய் 4 லட்சம் கோடியை எட்டியிருக்கும் நிலையில் மேலும், ரூ.43 ஆயிரம் கோடி கடன் வாங்குவோம் என தெரிவித்துள்ளது. இந்தக் கடன் சுமையோடு வருவாய் பற்றாக்குறை ரூ.44 ஆயிரத்து 176 கோடியை எப்படி ஈடுசெய்யும் என்பதை தெளிவுப்படுத்தவில்லை.
நிதி பகிர்வில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்து வருவதாலும் ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் உதய் திட்டம் ஏற்கப்பட்டதால் நிதிச்சுமை அதிகரித்து வருகிறது என புலம்பும் நிதிநிலை அறிக்கை வஞ்சித்து வரும் மத்திய அரசை விமர்சிக்க அஞ்சி அமைதியாகி விடுகிறது.
'கஜா' புயலால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பறிபோகியுள்ள நிலையில் அவர்களுக்கான நிவாரணம் வழங்குவது, மறுவாழ்வை உறுதி செய்வது என்பதற்கான எந்தத் திட்டமும் இல்லை. விவசாயிகளுக்கு கடன் நிவாரணம் வழங்கப்படவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக வேலை இழந்து வரும் விவசாயத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்புக்கான வழிவகைகள் செய்யப்படவில்லை.
சிறு,குறு தொழில்கள் புத்துயிரூட்டுவதற்கான திட்டங்களும் நிதிநிலை அறிக்கையில் இல்லை.
அடிப்படையான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லும் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. உரிமைக்காக போராடுபவர்கள் மீது தேசத் துரோக பிரிவுகள் உட்பட கடுமையான சட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. வழிப்பறிக் கொள்ளை, குரூரப் படுகொலைகள் போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்து, சட்டம் ஒழுங்கு நிலைகுலையும் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது.
மொத்தத்தில் நிதிநிலை அறிக்கை மாநில மக்களின் நலனுக்கோ, வளர்ச்சிக்கோ உதவும் நோக்கம் எதுவும் இல்லாத வெற்றுக் காகித தொகுப்பாக உள்ளது" என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.