திருமண நிகழ்ச்சியில், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய வலியுறுத்தும் வகையிலான பதாகைகளை மணமக்கள் ஏந்தி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் இரா.மணிவண்ணன். இவர் மே பதினேழு இயக்கத்தின் உறுப்பினராக உள்ளார். இவருக்கும் வினோதினி என்ற பெண்ணுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) திண்டுக்கல்லில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் மணமக்கள் இரா. மணிவண்ணன்- பா.வினோதினி, ஆகியோர் மணமேடையில் "7 தமிழர்களை விடுலை செய்; சட்டமன்ற தீர்மானத்திற்கு உயிர் கொடு" என்ற பதாதையை ஏந்தி ஏழு தமிழர்களையும் விடுலை செய்ய வலியுறுத்தினர்.
மணமக்களை வாழ்த்த வருகை தந்த மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் மே பதினேழு இயக்கத்தினர் மேற்கூறிய பதாகையையும், குறிப்பிட்ட ஏழு சிறைவாசிகளின் புகைப்படத்தையும் ஏந்தியிருந்தனர்.
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்புகள் நீண்ட நாட்களாக ஏழு தமிழரை விடுவிக்க பல்வேறு போராட்டங்களின் மூலம் வலியுறுத்தி வருகின்ற நிலையில் திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளிலும் ஏழு தமிழரை விடுவிக்கும் கோரிக்கை எழுந்திருப்பது அனைவரையும் வியக்க வைத்தது.