தமிழகம்

கிரண்பேடி மக்களுக்கு வேலை செய்யவில்லை; மோடிக்காக வேலை செய்கிறார்: நாராயணசாமியைச் சந்தித்த பின் கேஜ்ரிவால் பேட்டி

செ.ஞானபிரகாஷ்

நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாகியும் புதுச்சேரி, டெல்லிக்கு இன்னும் ஜனநாயகம் கிடைக்கவில்லை என டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ராஜ்நிவாஸ் வெளியே 6-வது நாளாக முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தலைமையில்  தர்ணா போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று (திங்கள்கிழமை) புதுச்சேரி வந்தார். அவர் முதல்வர் நாராயணசாமியை ராஜ்நிவாஸ் வெளியே சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து இருவரும் சிறிது நேரம் பேசினர். அதைத்தொடர்ந்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''துணைநிலை ஆளுநர் இருக்கை என்பது சிறியது. அந்த இருக்கைக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம். நாடு மிகப்பெரியது. மக்கள் தான் எஜமானர்கள். இதை கிரண்பேடி புரிந்துகொள்ள வேண்டும். மத்தியில் காங்கிரஸ் அரசு வந்தாலும் இதே கோரிக்கையை வலியுறுத்துவோம், டெல்லி, புதுச்சேரி முதல்வர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்கள் முழு அதிகாரத்துடன் இருக்க வேண்டும். மக்களுக்காகவும், அவர்கள் உரிமைக்காகத்தான் போராடுகிறோம்'' என்று குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசியதாவது:

''ஆளுநர் கிரண்பேடி மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் இல்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் போட்டியிட்டு மோசமான தோல்வியை எங்களிடம் அடைந்தவர்.

தேர்தலில் தோல்வியடைந்தவர் ராஜ்நிவாஸில் ஆளுநராக அமர்ந்து ஆட்சி புரிகிறார். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தர்ணாவில் உள்ளனர். ஜனநாயகத்துக்கு வெட்கக்கேடான விஷயம். கிரண்பேடி மக்களுக்கு வேலை செய்யவில்லை. மோடிக்காக வேலை செய்கிறார். மோடிக்கு மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டவர்.

புதுச்சேரி, டெல்லி துணைநிலை ஆளுநர்கள் மக்களால் தேர்வான அரசுக்கு எதிராக சதி செய்து பணி செய்ய விடாமல் மக்களிடத்தில் அவப்பெயர் ஏற்படுத்தவே அனுப்பப்பட்டுள்ளனர். அப்பணியில் முயல்கின்றனர். புதுச்சேரி போல் டெல்லியிலும் இதே பிரச்சினைதான்.

நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாகியும் புதுச்சேரி, டெல்லிக்கு இன்னும் ஜனநாயகம் கிடைக்கவில்லை. இதர மாநிலங்களில் முழு அதிகாரமுள்ளது. இருமாநிலங்களில் அதுபோல் இல்லை. முழு மாநில அந்தஸ்து தருவது அவசியம். இரு மாநில முதல்வர்களும் இணைந்து போராடுவோம்''.

இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி, மாநிலத் தலைவர் நமச்சிவாயம் மற்றும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட பலர் பங்கேற்றனர். 

SCROLL FOR NEXT