தமிழகம்

‘‘அரசியல் பேசவில்லை; நீங்கள் எதிர்பார்த்த சந்திப்பு இது இல்லை’’- விஜயகாந்தை சந்தித்த பின் ஸ்டாலின் பேட்டி

செய்திப்பிரிவு

உடல்நலம் குறித்து விசாரிக்க மனிதாபிமானத்துடன் வந்ததாக, விஜயகாந்தை சந்தித்த பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளில் எந்தக் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இருக்கும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இரு கட்சிகளும் தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை), சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தார். அப்போது, விஜயகாந்த் உடன் அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், அக்கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவில் உள்ளவருமான எல்.கே.சுதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

விஜயகாந்தை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பியுள்ளார். நாங்கள் இருவரும் நீண்டகால நண்பர்கள். அவரின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தேன். தலைவர் கருணாநிதி மீது அன்பும் பாசமும் பக்தியும் கொண்டிருந்தார். அவரின் மறைவின்போது விஜயகாந்த் வெளிநாட்டில் இருந்தார். அப்போது, வீடியோ மூலமாக விஜயகாந்த் இரங்கல் செய்தியை சொன்னபோது தாங்க முடியாத சோகத்தில் அவர் அழுத காட்சி இன்றைக்கும் மனதில் நிழலாடுகிறது.

அதற்கு பின்னர் சிகிச்சை முடிந்து திரும்பிய பிறகு நேரடியாக கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதன்மூலம் அவர் மீது விஜயகாந்த் எந்தளவுக்கு பக்தி வைத்திருந்தார் என்பது புரியும். இப்போது சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறி வந்திருக்கிறார். இன்னும் உடல்நிலை முன்னேறி நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் அவர் பணியாற்றிட வாழ்த்துகள் தெரிவித்தேன்" என, ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையடுத்து, திமுக கூட்டணிக்கு விஜயகாந்தை அழைத்தீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அரசியல் பேசுவதற்காக வரவில்லை. உடல்நலம் குறித்து மனிதாபிமானத்துடன் விசாரிக்க வந்தேன். நீங்கள் எதிர்பார்த்த சந்திப்பு இல்லை. உங்கள் நல்ல எண்ணத்திற்கு நன்றிகளும் பாராட்டுகளும்", என்றார், ஸ்டாலின்.

முன்னதாக, இன்று காலையில் விஜயகாந்தை ரஜினிகாந்தும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. துளியும் அரசியல் பேசவில்லை எனவும், உடல்நிலை குறித்து விசாரிக்கவும் தான் வந்ததாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT