தமிழகம்

‘சூலூர் வரலாறு படைத்த செந்தலை கவுதமன்- பெரியாரால் பெயர் சூட்டப்பட்ட எழுத்தாளர்

கா.சு.வேலாயுதன்

கோவை சூலூரில் புலவர் செந்தலை ந.கவுதமன் இல்லத்துக்குச் சென்றால், வீடு முழுக்க புத்தகங்கள்தான். தமிழாசிரியராய் இருந்து ஓய்வுபெற்ற இவரின் உயர்ந்த சிந்தனை, படைப்பிலக்கிய பணியைப் பற்றிப் பேசாத எழுத்தாளர்களே கொங்கு மண்டலத்தில் இல்லை எனலாம். அவரது ‘சூலூர் வரலாறு’  கோவையின் முக்கிய வரலாற்று ஆவணம்."அந்த நூல் உருவானதே பெரிய கதை. அது ஒரு குழுவின் ஒருமித்த முயற்சி!" என பேச்சைத் தொடங்கினார்.

"எனக்கு சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் செந்தலைப் பக்கமுள்ள திருக்காட்டுப் பள்ளி. அங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். அப்பள்ளியின் முன்னாள் மாணவர்களில் ஒருவர் கோ.நம்மாழ்வார்.

அப்பள்ளியில் பணியாற்றி, ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆர்.பாலசுப்பிரமணியம் ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் `செந்தலை வரலாறு` எழுதியுள்ளார். அந்தப் புத்தகம் என் வீட்டில்  இருந்தது. முத்தரையர்களின் தலைநகரம் செந்தலை. விஜயாலய சோழன் அவர்களை வீழ்த்திய பின்னர்தான், தஞ்சை சோழர்களின் தலைநகரானது. கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதித்த சோழன், எங்கள்  ஊரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலைக் கட்டினார். அவர் கோவைக்கும் வந்தார். வேட்டை, ஆடு, மாடு மேய்த்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களிடையே, வேளாண்மைத்  தொழிலை ஏற்படுத்தி, நிலையான வாழ்க்கைமுறையை அறிமுகப்படுத்துகிறார். கரூர், பொங்கலூர், பல்லடம் என தொழிலுக்கான ஆட்கள் நிரப்பப்பட்டு, அப்படியே சூலூர் வருகிறார்கள். சூலூர் அன்றைக்கு சூரலூர்.

சூரல் என்றால் பிரம்பு. சூரல் பெரம்புக் கொடி இன்னமும் சூலூரில் நொய்யலாற்றங்கரைகளில் உள்ளன. சூரலூகிய அரிய பிராட்டி நல்லூர் என சோழன் பெயர் வைக்கிறார். அதற்கு ஆதாரமாக,  சூலூர் முத்துக்கவுண்டனூரில் அரியதிரட்டி அம்மன் கோயில் இன்றைக்கும் உள்ளது. அந்த வரலாற்றை எல்லாம் சோழன் பூர்வ பட்டயம் நூல் விளக்கமாகச் சொல்லுகிறது" என்று விவரித்தார். மீண்டும் பால்யகால அனுபவத்துக்குள் செல்லுகிறார்.

"எங்க அப்பா 8-ம் வகுப்பு படித்தவர். தீவிர திராவிட இயக்கத் தோழர்.  ஊரில் சைக்கிள் கடை, விறகுக்கடை, வெற்றிலை பாக்குக் கடை வைத்திருந்தார். பாட்டி செல்லம்மா  பெயரால் வாசகசாலையும் நடத்தினார். மணமாகி 10 வருஷம் குழந்தை இல்லை. `நாத்திகம், பகுத்தறிவு பேசறதாலதான்,  அவனுக்கு குழந்தையில்லாம போச்சு`னு உறவுகளும், ஊரும் பேசியிருக்கு.

அந்த நேரம் எல்லாம் பெரியார்தான், அப்பாவை ஆறுதல்படுத்தியிருக்கிறார். அப்புறம்தான் நான் பிறந்தேன். அப்ப பெரியாரே என் வீட்டுக்கு வந்து, கவுதமன்னு பேரு வெச்சிருக்கார். செந்தலை ஊராட்சி தொடக்கப் பள்ளியிலும், திருக்காட்டுப்பள்ளி சிவசாமி ஐயர் உயர்நிலைப் பள்ளியிலும் படிச்சேன். அடுத்தது திருவையாறு அரசர் கல்லூரியில் 4 ஆண்டு புலவர் படிப்பு. 

1968-ல் உலகத் தமிழ் கழகத்தை  தேவநேயப் பாவாணர் உருவாக்கினார். அதன் பொதுச் செயலர் பெருஞ்சித்திரனார். அவர்களது  கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, எங்கள் ஊரில் அந்த அமைப்புக்கு ஒரு கிளையைத் தொடங்கினோம்.

என் பள்ளி ஆசிரியர்கள் த.வே.கோபாலய்யர், வி.வ.அரங்கசாமி பெரிய அறிஞர்கள். அதே பள்ளியில் படித்தவர்கள். மாநில முதல் மாணவர்களாகவும் தேறியவர்கள்.  நானும் மாநிலத்தில் முதல் மாணவனாக வர விருப்பம். 22 கிலோமீட்டர் தொலைவு  சைக்கிள் பயணம். வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கில்தான் படிப்பு. 1975-ல் முதல் மாணவனாகவே தேர்ச்சி பெற்றேன். 1976-ல் திருச்சி தனிப் பயிற்சி கல்லூரியில் ஆசிரியராகப் பணி. அதே பயிற்சி மையத்தின் கோவை கிளைக்கு 1978-ல் பணிமாற்றம். அதே வருடம், அரசு உதவி பெறும் சர்வஜன பள்ளியில் தமிழாசிரியர் பணி. ஒரு வார காலம்தான். அரசு ஆசிரியப் பணியும் தேடி வந்தது. ஆனால், அதை ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசி வரை சர்வஜன பள்ளியிலேயே இருந்து ஓய்வுபெற்றேன்.

சர்வஜன பள்ளியில் தமிழாசிரியராக இருந்த அ.கிருஷ்ணசாமி நாயுடு, 1950-ல்  'பூளைமேடு வரலாறு'  என்ற நூலை எழுதியுள்ளார். அந்த நூல் எங்கள் பள்ளியில் கிடைத்தது. ஏற்கெனவே, நான் படித்த ‘செந்தலை வரலாறு’ நூலும் நினைவுக்கு வந்தது.

ஒரு வரலாற்று நூல், அந்த மண்ணின் மொழி, வரலாறு, பண்பாடு, சமூகம், இலக்கியம், இயக்கம்கொண்ட கட்டமைப்பாக இருக்க வேண்டும், அரசர்களின், ஆதிக்க சக்திகளின் பெருமையாக இல்லாமல், வாழும் மக்களைப் பற்றிய வரலாறாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் இந்த நூல்கள் ஏற்படுத்தின.

சூலூரில் திராவிட இயக்கச் சிந்தனையாளர்களின் தோழமை கிடைத்தது. பாவேந்தர் பேரவை உள்ளிட்ட இயக்கங்களின் மீது ஈடுபாடு வளர்ந்தது. கவிதைகள், கட்டுரைகள், மலர் வெளியீடுகள் என நிறைய எழுதும் அவசியம் ஏற்பட்டது.

இந்த நேரத்தில்தான் சூலூரின் 100-ம்  ஆண்டு நிறைவு வந்தது. அப்போதைய பேரூராட்சித்  தலைவர், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் என்னை அணுகி, சூலூர் உள்ளாட்சி வரலாறு எழுதச் சொன்னார்கள். இதையடுத்து, 30 பேர் கொண்ட குழுவை அமைத்து, 100 ஆண்டுகளாக ஊராட்சிமன்றத்தில் இருந்த ஆவணங்கள்,  ஏடுகள் எல்லாம் தேடியெடுத்தோம். வயதில் மூத்த பெரியவர்களை பேட்டி கண்டோம். ஏறத்தாழ 2 ஆயிரம் ஆண்டு வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கவே, அந்த நூலை சூலூர் வரலாறாகவே மாற்றினோம். 1996-ல் இந்த நூலை ஆனைமுத்து வெளியிட்டார். திரைப்பட இயக்குநர்கள் மணிவண்ணன், பாரதிராஜா, கவிஞர் புலமைப்பித்தன், ஐஏஎஸ் அதிகாரி கருப்பண்ணன் உள்ளிட்டோர் அந்த விழாவில் கலந்துகொண்டனர்.

வெளியிடப்பட்டு 23 ஆண்டுகள் கழித்து,  கூடுதல் தகவல்களுடன் `சூலூர் வரலாறு` நூல் புதுப்பொலிவுடன்  தயாராகிக் கொண்டிருக்கிறது" என்றார் பெருமிதத்துடன். புலவரிடம் இன்னொரு சிறப்பு. அவர் இதுவரை மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர், மொபட், கார் என எதுவுமே வாங்கவில்லை. அவர் வைத்திருக்கும் ஒரே வாகனம் மிதிவண்டிதான்.

மேடைப் பேச்சில் வல்லவர்

விடுதலைப் போரில் கோவை, கோவை கண்ட மொழிப்போர், கோவை மாவட்ட கல்வி வரலாறு, பகுத்தறிவு இயக்கத்தில் பாரதிதாசன், அழகின் சிரிப்பில் பாரதிதாசன், நாம் வாழும் கோவை, கோவை வளர்த்த தமிழ்- 6 தொகுதிகள் என 12-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள செந்தலை கவுதமன், மேடைப் பேச்சிலும் வல்லவர். "வார்த்தைப் பிசிறில்லாமல், கரைபுரள வைக்கும் பேச்சு வேகத்தை எப்படி கற்றுக் கொண்டீர்கள்?" என்று கேட்டதற்கு, "என் ஆசிரியர் தி.வே.கோபாலய்யர், மொழி வளம், மொழி ஆளுமை மிக்கவர். கம்ப ராமாயணத்தில் 12 ஆயிரம் பாடல்களையும் மனப்பாடமாக சொல்வார்.  200 சங்கப் பாடல்களை  அடிப்பிறழாமல் சொல்லி அசர வைப்பார். அவரது மாணவர்களான எங்களிடையே, மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதிலும், விளக்கம் சொல்லுவதிலும் பெரும் போட்டியே இருக்கும். அதுதான் என்னை மேடைதோறும் அப்படிப் பேச வைக்கிறது என நினைக்கிறேன்" என்றார்

SCROLL FOR NEXT