சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று முதல் நவ.7-ம் தேதி வரை 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.5 முதல் 7-ம் தேதி வரை, சென்னையில் இருந்து இயக்கக் கூடிய 6,573 பேருந்துகளுடன் கூடுதலாக 9,086 சிறப்புப் பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 15,659 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்களுக்கு இடையே 26,000 சிறப்பு பேருந்துகள் இயக்கபட உள்ளன. தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், நவ.9, 10 ஆகிய தேதிகளில் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு இயக்கக் கூடிய 4,382 பேருந்துகளுடன் கூடுதலாக 6,815 சிறப்புப் பேருந்துகள் என 2 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 11,197 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சென்னையில் 5 நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், மார்க்கமாக செல்லும் பேருந்துகள், கிளாம்பாக்கம் சிஎம்டிஏ பூங்கா அருகில் திறந்த வெளி இடத்தில் இருந்து வந்த வாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள், மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், சென்னையில் இருந்து திருவான்மியூர், ஆவடி, தாம்பரம், திருவொற்றியூர், சிறுசேரி, அடையாறு, பிராட்வே, எழும்பூர், அம்பத்தூர், தரமணி, தீவுத் திடல், கிண்டி, வேளச்சேரி, அசோக் பில்லர், பூந்தமல்லி, சைதாப்பேட்டை ஆகிய 16 இடங்களில் இருந்து முன்பதிவு செய்த பயணிகளுக்காகப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இன்று 5,061 பேருந்துகள்
சென்னையில் இருந்து இன்று வழக்கமாக இயக்கப்படும் 2,191 பேருந்துகளுடன் 2,316 கூடுதல் சிறப்பு பேருந்துகள் மற்றும் தனியார் ஒப்பந்த பேருந்துகள் 554 என மொத்தம் 5,061 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. நாளை மொத்தம் 5,431 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
தீபாவளி சிறப்பு ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாம்பரத்தில் இருந்து நவ.6-ம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06111) மறுநாள் காலை 9.20 மணிக்கு திருநெல்வேலி செல்லும். மறுமார்க்கமாக, திருநெல்வேலியில் இருந்து நவ.9-ம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06112) மறுநாள் காலை 9 மணிக்கு தாம்பரம் வரும்.
விழுப்புரம், திருச்சி, சிவகங்கை, மானாமதுரை, விருதுநகர், ராஜபாளையம், தென்காசி வழியாக இந்த ரயில் செல்லும். இந்த 2 சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (நவ.5) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
தாம்பரம் - மானாமதுரைக்கு நவ.6, 7 தேதிகளிலும், மானாமதுரை - தாம்பரத்துக்கு நவ.7, 9 தேதிகளிலும் முன்பதிவு இல்லாத மெமு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதேபோல, சென்னை எழும்பூர் - திருச்சிக்கு நவ.6, 7 தேதிகளிலும், திருச்சி - தாம்பரத்துக்கு நவ.7-ம் தேதியும், திருச்சி - எழும்பூருக்கு நவ.9-ம் தேதியும் முன்பதிவு இல்லாத சிறப்பு மெமு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.