புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருப்பதாகவும் இலவச அரிசி, பொங்கல் பரிசுகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காததையும் கண்டித்து மாநில முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு அமைச்சர்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடந்த 13-ம் தேதி முதல் தொடர் தர்ணா போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து 6-வது நாளாக தர்ணா போராட்டம் நடந்துவரும் நிலையில் முதல்வர் நாராயணசாமி 'தி இந்து'வுக்கு (ஆங்கிலம்) அளித்த சிறப்புப் பேட்டி.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன் கடந்த இரண்டரை ஆண்டுகளாக உங்களின் அரசு போராடி வருகிறது. எது இப்போது அவருக்கு எதிராக உங்களைப் போராடத் தூண்டியது?
கிரண்பேடி பதவியேற்ற காலத்தில் இருந்தே மக்கள் நலத் திட்டங்களைத் தடுத்து வருகிறார். இலவச அரிசித் திட்டம் மற்றும் குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆகியவை இதில் அடங்கும். நிதி ஒதுக்கீட்டுக்கான ஒப்புதல் அளிப்பதில் கையெழுத்திடாமல் கிரண்பேடி தடை செய்கிறார். ஆங்கிலோ ஃப்ரெஞ்சு மற்றும் சுதேசி பாரதி ஜவுளி ஆலை ஊழியர்களுக்கான விஆர்எஸ் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க கேபினெட் அமைச்சரவை முடிவெடுத்தது. ஆனால் மில்களை மூடுமாறு கிரண் பேடி உத்தரவு பிறப்பித்துவிட்டார். இதுதான் அவருக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் தொடங்கக் காரணியாக அமைந்தது.
எவ்வளவு நாள் போராட்டத்தைத் தொடரப் போகிறீர்கள்?
கேபினெட்டின் உதவி மற்றும் ஆலோசனையோடு கிரண்பேடி செயல்பட வேண்டும். 'நானே அரசாங்கம்', 'எனக்கு எல்லாம் தெரியும்' என்ற மனநிலையை அவர் விட்டொழிக்க வேண்டும். மத்திய அரசுக்கு நாங்கள் வழங்கும் திட்ட முன்மொழிவுகளில் மாற்றுக் கருத்து இருந்தால் அதையும் அவர் அனுப்புவதில்லை. கடந்த பிப்ரவரி 7-ம் தேதி நாங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அனைத்துப் பிரச்சினைகளும் தீரும் வரை போராட்டத்தைத் தொடரலாம் என்று இருக்கிறோம்.
உங்களின் போராட்டம் புதுச்சேரியின் நிர்வாகத்தைப் பாதிக்கவில்லையா?
எங்களின் தர்ணா தினசரி நிகழ்வுகளைப் பாதிக்கவில்லை. போராட்டக் களத்தில் இருந்தே தேவைப்படும் கோப்புகளில் கையெழுத்திட்டு அமைச்சர்கள் அனுப்பிவிடுகின்றனர்.
ஹெல்மெட் அணிவது கட்டாயமில்லை என்று நீங்கள் மோட்டார் ஓட்டிகளிடம் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளதே.. சென்னை உயர் நீதிமன்றம் கூட ஹெல்மெட் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது...
என்னுடைய கோரிக்கைகள் அடங்கிய பட்டியலில் ஹெல்மெட் பிரச்சினையை எழுப்பவே இல்லை. உயர் நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக கிரண்பேடி இந்த விவகாரத்தைத் திசை திருப்புகிறார். ஹெல்மெட் பிரச்சினையால் நாங்கள் போராட வரவில்லை. ஆளுநர் இந்த விவகாரத்தின் மூலம் ஊடகங்களைத் திசைதிருப்ப முயல்கிறார்.
எப்போது, எப்படி ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவிப்பீர்கள்?
நீதிமன்றம் அதனுடைய உத்தரவில், ஹெல்மெட்டைக் கட்டாயமாக்குவதற்கு முன்னால் விழிப்புணவுப் பேரணியை நடத்தச் சொல்லி இருக்கிறது. பிப்ரவரி 4-ம் தேதி சாலைப் பாதுகாப்பு வார விழா நடந்தது. அப்போது ஹெல்மெட்டின் அவசியம் குறித்து 2 மாதங்கள் பேரணி நடத்தச் சொல்லி காவல்துறையிடம் கூறியிருந்தேன். அதற்குள்ளாக கிரண்பேடி இதில் மூக்கை நுழைத்துவிட்டார். இதுதான் இந்த விவகாரத்தில் என்னுடைய ஆட்சேபனை.
நிதியுதவி மானியங்களை வழங்குவதில் நீங்கள் விதிகளை மீறுவதாக கிரண்பேடி குற்றம் சாட்டியிருக்கிறாரே..?
மானியங்கள் கடந்த 50 ஆண்டுகளாக விதிகளின்படியே வழங்கப்படுகின்றன. ஆனால் விதிகளை வெறுமனே படித்துவிட்டு, நிதி அதிகாரங்களைப் பிடுங்க கிரண்பேடி முடிவு செய்துவிட்டார். ஆனால் அவர், தனது அதிகாரங்களின் பிறப்பிடத்தைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டார். சேப்டர் 3, விதி 7(1)-ன் படி, துணைநிலை ஆளுநர் என்பவர், அமைச்சரவைக் குழுவின் ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும்.
இந்தியக் குடியரசுத் தலைவராக அவரை நியமிக்காததற்கு பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் தன்னுடைய தவறான சித்தரிப்புப் பழக்கம் மற்றும் நுனிப்புல் மேயும் வழக்கத்தால், நாடு முழுக்க குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி விடுவார்.