பிப்.24 அன்று ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி பேனர்கள் வைக்க அதிமுகவைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் பாலகங்கா சார்பில் கோரப்பட்ட அனுமதியை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் வரும் பிப்ரவரி 24-ம் தேதி வருகிறது. ஜெயலலிதாவின் பிறந்த நாளை அதிமுக சார்பில் கோலாகலமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனர். இதற்காக சென்னையில் பேனர்கள் வைக்க அனுமதி கோரி அதிமுகவின் சார்பில் அதிமுக வட சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் பாலகங்கா இடையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதிகள் எம்.சத்யநாராயணன் மற்றும் எம்.நிர்மல் குமார் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பாலகங்கா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவில், ''பிப்.24 தேதி ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு பேனர்கள் வைக்க அனுமதி அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
அதற்கு ஏற்றவாறு, இதற்கு முன்னர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த விதிமீறல் பேனர்கள் வழக்கில் கடந்த ஆண்டு டிச.19-ம் தேதி பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த டிச.19-ம் தேதி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு , மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சியினர் சாலைகளில் பேனர் வைக்க இடைக்காலத் தடை விதித்திருந்தனர்.
மேலும் பாலகங்காவின் மனுவில், ''ஏற்கெனவே வைத்த பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன. தற்போது வைக்கப்பட இருக்கும் பேனர்களில் விதிமீறல் இருந்தால் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கட்டும். கோயம்புத்தூரில் பேனர்கள் வைத்த கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகம் முழுவதும் வைக்கப்பட்ட சட்டவிரோத பேனர்கள் அகற்றியது தொடர்பாக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மேற்கொண்டு அங்கீகாரமில்லாமல் பேனர்கள் வைக்க அனுமதிக்கப்படாது என நகராட்சி நிர்வாக துறை செயலாளர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்த அறிக்கை சட்டவிரோத பேனர்களை அகற்றியது தொடர்பாக மட்டுமே உள்ளது என்றும், விதிமீறல் பேனர்களைத் தடுப்பதற்கான எந்த திட்டமும் அறிக்கையில் இல்லை எனவும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மீண்டும் புதிதாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், தற்போது அதிமுக பேனர் ஏதும் இல்லையா? நாங்கள் பட்டியல் தரட்டுமா? என கேள்வி எழுப்பினர். அதிமுக வைக்கும் பேனர்களுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவின் மாண்பு காக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர்.
இதுவரை அதிமுக வைத்த பேனர்களில் விதிமீறல் எதுவும் இல்லை என கூடுதல் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள், ஜெயலலிதா பிறந்த நாள் அன்று பேனர் வைக்க அனுமதி கோரிய பாலகங்காவின் கோரிக்கை மனுவை நிராகரித்தனர்.
பாலகங்காவின் மனு குறித்து தமிழக அரசு மற்றும் பிற அரசியல் கட்சிகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.