கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நடவடிக்கைகளை எதிர்த்து வாக்குவாதம் செய்ததாக பேராசிரியர் ஜெயராமன் கைது செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் சோழவள நாடாம் காவிரி தீரத்தில் மீத்தேன் எரிவாயு, படிம எரிவாயு, ஹைட்ரோ கார்பன் எரிவாயு ஆகிய திட்டங்களை நிறைவேற்றி, தமிழகத்தின் வளமான பகுதியை பாலைவனமாக்கி, பஞ்ச பிரதேசமாக்கி, கார்ப்பரேட் கம்பெனிகள் விவசாய நிலங்களை வருங்காலத்தில் விலைக்கு வாங்கி பூமிக்கு அடியில் உள்ள எரிவாயு மூலம் ஆயிரக்கணக்கான கோடி பணத்தைக் கொள்ளையடிக்கும் கொடிய நோக்கத்தில் மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு செயல்படுகிறது.
வேளாண் நிலங்களை, விவசாயிகளைப் பாதுகாக்கும் அறப்போரில் தொடர்ந்து பேராசிரியர் ஜெயராமன் ஈடுபட்டு வருகிறார். மத்திய அரசுக்கு குற்றேவல் புரியும் எடுபிடி அரசாக செயல்படும் தமிழ்நாட்டின் அதிமுக அரசு, பேராசிரியர் ஜெயராமன் போன்றோரைக் கைது செய்து மாதக் கணக்கில் சிறையில் அடைக்கும் பாசிச அடக்குமுறை தொடர்ந்துகொண்டே உள்ளது.
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நடவடிக்கைகளை எதிர்த்து வாக்குவாதம் செய்த பேராசிரியர் ஜெயராமனையும், அவரது குடும்பத்தினரையும் கைது செய்த காவல்துறையின் அடக்குமுறை அக்கிரமச் செயலுக்கு பலத்த கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
லட்சோப லட்சம் விவசாயிகளுடைய கிளர்ச்சியை காவல்துறை மூலம் அடக்கிவிடலாம் என்று செயல்படும் அதிமுக அரசுக்கு எதிராக மேலும் மேலும் விவசாயிகள் கொந்தளிப்பு எரிமலையாகும் என எச்சரிக்கிறேன்.
கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமனையும், அவரது குடும்பத்தினரையும், அவருடன் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்" என வைகோ வலியுறுத்தியுள்ளார்.