தமிழகம்

திமுக கொடியின் கறுப்பு-சிவப்பு நிறங்களின் குறியீட்டு அர்த்தம் என்ன? - அண்ணாவின் வாசகங்களை மேற்கோள் காட்டி ஸ்டாலின் விளக்கம்

செய்திப்பிரிவு

“எந்நாளும் நம் நெஞ்சில் வாழும் அண்ணாவின் நினைவைப் போற்றிப் பயணிப்போம்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் தொண்டர்களுக்கு எழுதிய உணர்ச்சிப்பெருக்குக் கடிதத்தில் திமுக கொடி நிறங்களின் குறியீட்டு அர்த்தம் என்ன என்பதை அறிஞர் அண்ணாவின் வாசகங்களை மேற்கோள் காட்டி விளக்கினார்.

அந்தக் கடிதத்தில் அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:

மனித வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும் இனம் - மொழி விடுதலைக்காவும் மாநில உரிமை காக்கவும் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

கொட்டும் மழையில் சென்னை ராபின்சன் பூங்காவில் தி.மு.கழகத்தின் தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. “திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே சமதர்மம், அரசியலில் ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை ஆகியவைதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகள்” என்று அண்ணா முழங்கினார்.

கறுப்பு - சிவப்பு எனும் இருவண்ணக் கொடி கழகக் கொடியானது. “கறுப்பு நிறம் என்பது அரசியல், பொருளாதார, சமுதாய வாழ்வில் உள்ள இருண்ட நிலையை உணர்த்தி நிற்கும் அடையாளமாகும். சிவப்பு நிறம் அம்மூன்று துறையிலும் உள்ள இருண்ட நிலையைப் போக்கி ஒளி நிலையை உண்டாக்க வேண்டும் என்பதைக் காட்டும் குறியீடாகும். இருண்ட நிலையை ஒளிநிலை அழித்துக் கொண்டு வரவேண்டும். இருண்ட வானில் அடியில் தோன்றி எழும்பும் இளம்பரிதி ஒளி போல் என்ற கருத்துடன் கறுப்பு மேலும், சிவப்பு கீழும் வைக்கப்பட்டுள்ளது” என இருவண்ணக் கொடிக்கான விளக்கத்தை எடுத்துச் சொன்னவர் அண்ணா.

இரவெல்லாம் இருண்டிருக்கும் உலகத்திற்கு, அடிவானத்தில் தோன்றுகிற உதயசூரியன் எப்படி ஒளி ஏற்றுகிறதோ அப்படிப்பட்ட இயக்கம்தான் நம் குருதியுடன் கலந்திருக்கும் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம். 1957ஆம் ஆண்டு கழகம் முதன்முதலாகத் தேர்தல் களத்தை எதிர்கொண்ட போது, பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இனமானப் பேராசிரியர் உள்ளிட்ட கழக முன்னோடிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, அதுவே நமது வெற்றிச் சின்னமாக நிலைத்திருக்கிறது என்பதையும் நினைவுபடுத்திட விரும்புகிறேன்.

எதனையும் தொலைநோக்குப் பார்வையுடனும் ஜனநாயக குணத்துடனும் சிந்தித்து செயல்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். திராவிட நாடு கொள்கையை 1962ஆம் ஆண்டு மாநிலங்களவையில் அவர் முழங்கியபோது, அன்றைய பிரதமர் பண்டித நேரு உள்பட பலரும் வியந்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சி கண்டு அதிர்ந்தனர். அதனால்தான், 1963ல் பிரிவினைத் தடைச் சட்டம் கழகத்தை குறி வைத்துக் கொண்டு வரப்பட்டது. மிகக்கடுமையான அந்த சோதனை காலகட்டத்தை அறிவுப்பூர்வமாக அனாயாசமாகக் கடந்தவர் பேரறிஞர் அண்ணா.

இவ்வாறு கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT