கானத்தூர் போலீஸ் சரகத்தின் கீழ் வரும் உத்தண்டியில் காரில் வைத்திருந்த பணத்தை கண்ணாடியை உடைத்து திருடிச்சென்றதாக புகாரின்பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2.5 கோடி மதிப்புள்ள அமெரிக்கன் டாலர்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
உத்தண்டி, நயினார்குப்பம், மீனாட்சி பார்ம் சாலையில் வசிப்பவர் வெங்கடாச்சலபதி. இவரது மனைவி லட்சுமி. இவரது பங்களாவில் வாட்ச்மேனாக சின்னபையன் என்பவர் 5 வருடமாக வேலை செய்து வருகிறார். பங்களாவிற்கு உள்ளேயே அவருக்கும் தங்கிக்கொள்ள ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது வீட்டில் வேலை நடப்பதால் தனது வீட்டிலுள்ள முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் ரூ.10 லட்சத்தை ஒரு பெட்டியில் போட்டு காரில் வைத்திருந்ததாகவும், கடந்த 27-ம் தேதி தனது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளிருந்த பணம், முக்கிய ஆவணங்கள் அடங்கிய பெட்டி திருடப்பட்டதாக லட்சுமி புகார் அளித்திருந்தார்.
போலீஸார் நடத்திய விசாரணையில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து பார்த்தபோது ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் கார் கண்ணாடியை உடைத்து திருடிச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கண்காணிப்புக் கேமராவில் வாட்ச்மேன் சின்னப்பையன் என்பவரின் மருமகன், ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி (29)-யின் உருவம் பதிவாகி இருந்தது. இதையடுத்து சிரஞ்சீவியை பிடித்து போலீஸார் விசாரித்தனர். சிரஞ்சீவி கால்டாக்சி ஓட்டுநராக பணியாற்றுகிறார். சின்னப்பையனின் மகளை சிரஞ்சீவி மணந்துள்ளார். தற்போது சிரஞ்சீவியின் மனைவி கர்ப்பமாக இருப்பதால் தந்தையின் வீட்டில் தங்கியுள்ளார்.
அப்படி சிரஞ்சீவி வரும்போது தனது நண்பர் காஞ்சிபுரம், செய்யாறைச் சேர்ந்த வேலு (எ) ஹயிட் வேலு ( 37) என்பவர் உடன் வந்துள்ளார். வேலு உப்பளம் காண்ட்ராக்டராக உள்ளார். ஒரு அரசியல் கட்சியிலும் உள்ளார். அப்போது மருமகன் சிரஞ்சீவியிடம் அவரது மாமானார் சின்னபையன் ஓனரின் காரை பத்திரமாக பார்த்துக் கொள் என்று கூறியுள்ளார்.
என்ன என்று கேட்டபோது காரில் முக்கியமான பெட்டிகள் சிலவற்றை வைத்துள்ளார் என கூறியுள்ளார். இதையடுத்து அதை திருட சிரஞ்சீவியும் வேலுவும் திட்டம் போட்டனர். திட்டமிட்டப்படி உடன் குமார், முத்து இன்னும் இருவருடன் 27-ம் தேதி இரவு 7 மணி அளவில் ஒரு காரிலும் மோட்டார் சைக்கிளிலும் லட்சுமியின் பங்களாவிற்கு வந்து கார் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடிச் சென்றனர்.
இதையடுத்து வேலு, குமார், முத்து உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர். மேலும் வேலு வீட்டில் இருந்த அனைத்து அமெரிக்கன் டாலர்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு 2.5 கோடி ரூபாய் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
திருட்டுக்குப் பயன்பட்ட கார் மற்றும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள்மீது ஐபிசி 380 (வீடு புகுந்து திருடுவது) கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சென்னையில் கார் கண்ணாடிகளை உடைத்து திருடுவதில் வள்ளவர்கள் பிடிபட்ட கும்பல் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னையில் சாதாரண திருட்டு வழக்கில் கோடிக்கணக்கில் ரொக்கப்பணம் பிடிபட்டது பரபரப்பாக பேசப்படுகிறது.