நட்சத்திர ஹோட்டலில் சோதனையிட்டு கிடைத்த சூதாட்ட பணத்தை பதுக்கி கொண்டதாக புகாரில் கிண்டி சட்டம்-ஒழுங்கு ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றி காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கிண்டி காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக இருப்பவர் எஸ்.என்.குமார். இவர் சரகத்துக்குட்பட்ட பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கடந்தவாரம் சூதாட்டம் நடப்பதாக புகாரின்பேரில் ஆய்வாளர் குமார் போலீஸாருடன் சென்றுள்ளார்.
அங்கு ஒரு நடந்த சோதனையில் லட்சக்கணக்கில் பணத்தை ஆய்வாளர் குமார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் நட்சத்திர விடுதியில் நடந்த சோதனை குறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமலும் நடத்திய போது கைப்பற்றப்பட்ட பணத்தை ஒப்படைக்காமல் காலங்கடத்தியுள்ளார்.
இந்த விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக கசிந்து மேலதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து நடந்த விசாரணையில் ஆய்வாளர் என்.எஸ். குமார் பணம் பதுக்கியது உண்மை என தெரியவந்தது.
இதையடுத்து ஆய்வாளர் எஸ்.என்.,குமாரை ஆயுதப்படைக்கு மாற்றி காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். பின்னர் துறை ரீதியான விசாரணையும் அவர்மீது நடத்தப்படும் என தெரிகிறது.