பெண்களை விட, ஆண்களே அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாக ஆய்வுகளை மேற்கோள்காட்டி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சை துறை தலைவர் டாக்டர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தீவிர நச்சுகள் முறிவு மற்றும் இரைப்பை குடல் அறுவை சிகிச்சைத் துறை இணைந்து தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியை புதன்கிழமை நடத்தின. மருத்துவமனை டீன் விமலா, துறைத் தலைவர்கள் ரகுநந்தனன், சந்திரமோகன் தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள், மாணவ, மாணவிகள், நோயாளிகள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் ஒருவரோடு ஒருவர் கைகளை இணைத்தபடி மருத்துவமனைக்கு வெளியே மனித சங்கிலி அமைத்தனர். அதன்பின் டீன் விமலா தலைமையில் தற்கொலை தடுப்பு உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
இறுதியாக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.
இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சை துறை தலைவர் டாக்டர் சந்திரமோகன் கூறியதாவது:
“உலகம் முழுவதும் இருப் பவர்கள் ஒன்றாக இணைந்து தற்கொலையை தடுப்போம்” என்பதே உலக தற்கொலை தடுப்பு தினத்தின் இந்த ஆண்டு கருப்பொருளாகும்.
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஒவ் வொரு 40 வினாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். 20 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர். உலக அளவில் தற்கொலை செய்துகொள்பவர்கள் எண்ணிக் கையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அதிலும் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் 2012-ம் ஆண்டு 1.35 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
30 வயதில் இருந்து 44 வயதுக்குள் உள்ளவர்களே பெரும்பாலும் தற்கொலை செய்து கொள்கின்றனர். பெண்களை விட, ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். அவர்களில் திருமணம் ஆன ஆண்களே அதிகம். இந்தியாவில் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் யோசிக்காமல் தற்கொலை செய்து கொள்கின்றனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.