சிவகங்கை கீழடி நோக்கி காரில் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் வருவதி அறிந்து பள்ளி மாணவர்கள் திரண்டு நின்று வாழ்த்து கோஷமிட உற்சாகமான ஸ்டாலின் காரை நிறுத்தி அவர்களுடன் கைகுலுக்கிவிட்டுச் சென்றார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஊராட்சி சபை கூட்டம் முடிவடைந்ததும் அங்கு நான்கு கட்டங்களாக தொல்லியல் ஆய்வு நடைபெற்ற பகுதிகளுக்குச் சென்று நேரில் பார்வையிட முடிவு செய்தார். அப்போது மத்திய அரசால் திட்டமிட்டு ஆய்வுப்பணிகள் புறக்கணிக்கப்படுவது குறித்து தி.மு.க தலைவரிடம் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
ஐந்தாம் கட்ட பணிக்கு நேற்று அனுமதியளித்துள்ள மத்திய அரசு, தொடர்ந்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதை உறுதிசெய்ய ஸ்டாலின் வலியுறுத்தினார். மேலும் தி.மு.க ஆட்சி வந்தவுடன், கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
கீழடியில் அகழ்வாராய்ச்சி நடந்த பகுதிகளை பார்வையிட புறப்பட்டுச் சென்ற தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினை பார்த்து அந்த வழியில் உள்ள குறலோவியம் நர்சரி மற்றும் நடுநிலைப்பள்ளி பள்ளி சிறுவர்கள் உற்சாகமடைந்து வாழ்த்து தெரிவித்து கூச்சலிட்டனர்.
இதைப்பார்த்த ஸ்டாலினும் உற்சாகமானார். காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கி பள்ளி மாணவர்களை நோக்கிச் சென்றார். பள்ளி காம்பவுண்டுக்கு பின்னிருந்து வாழ்த்து முழக்கமிட்ட மாணவர்கள் ஸ்டாலின் வாகனம் நிறுத்தப்பட்டவுடன் முதலில் தயங்கினர்.
பின்னர் ஸ்டாலின் சிரித்தப்படி காரிலிருந்து இறங்குவதைப்பார்த்து உற்சாகத்தில் ஸ்டாலினை நோக்கி கையை ஆட்டினர். தனது காரில் இருந்து இறங்கிய ஸ்டாலின் அவர்கள் அனைவரிடமும் கையை குலுக்கினார். இளம் சிறார்கள் அவருடன் கைகுலுக்க ஆர்வத்துடன் காம்பவுண்ட் சுவர்மீது ஏறி கை நீட்டினர்.
ஒரு சிறுமி கையில் திமுக கொடியை பிடித்து நின்றார், அந்தச்சிறுமியிடம் ஸ்டாலின் சிரித்தப்படி இது என்ன கொடி ஏன் கையில் வைத்துள்ளாய் எனக்கேட்க அந்தச்சிறுமி திமுககொடி இது எனச்சொல்ல அதைக்கேட்டு சிரித்தப்படி ஸ்டாலின் சென்றார். பின்னர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து ஸ்டாலின் காரிலேறி அகழவராய்ச்சி நடக்கு இடத்திற்கு சென்றார்.