நேற்று மதியம் மெரினா கடற்கரையில் குளித்த பள்ளி மாணவர்களை அலை இழுத்துச் சென்றது. இதில் 3 மாணவர்கள் கதி என்ன ஆனது என்று தேடிவந்த நிலையில் மாணவர்களின் உயிரற்ற உடல்கள் கரை ஒதுங்கின.
சென்னை மெரினா கடற்கரையின் தன்மை சுனாமிக்குப் பின் மாறிவிட்டது. நீச்சல் தெரிந்தவர்களே கடலில் குளித்தாலும் சுழன்று வரும் அலை அவர்களை வாரிச் சுருட்டி கொண்டுபோய் விடுகிறது. இதனால் ஆண்டுதோறும் கடலில் குளித்து உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இதைத் தடுக்க போலீஸார் மெரினாவில் குளிக்கத் தடை விதித்துள்ளனர். இது தொடர்பாக எச்சரிக்கைப் பலகையும் வைத்துள்ளனர். ஆனாலும் இதையெல்லாம் மீறிக் குளிப்பவர்கள் உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது. நேற்று நடந்த அப்படி ஒரு சமபவம் நடந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
தாம்பரம் முனிசிபாலிட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கும்பலாக மெரினா கடற்கரைக்கு வந்துள்ளனர். மதியம் 1 மணி அளவில் நேதாஜி சிலைக்குப் பின்புறம் உள்ள கடற்கரைப் பகுதிக்குச் சென்ற அவர்கள் கடலில் இறங்கி விளையாடினர். சிலர் குளித்தனர்.
அப்போது கடலில் குளித்துக் கொண்டிருந்த 9-ம் வகுப்பு மாணவர்களான கிண்டி, அம்பேத்கர் தெருவில் வசிக்கும் சதீஷ் (14), கிண்டி சுந்தரம் காலனியைச் சேர்ந்த விநோத்குமார் (14), சேலையூர் ராஜா தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் (14) ஆகியோரை அலை இழுத்துச் சென்றது. அவர்களைக் காணாமல் உடன் குளித்த மாணவர்கள் தேடினர்.
பின்னர் அழுதுகொண்டே மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கடலோர காவல்படை ஹெலிகாப்டர்கள் மூலம் நேற்று முழுதும் தேடியது. ஆனால் மாணவர்களின் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இன்று அதிகாலையில் மூவரின் உடல்களும் பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை கடற்கரையில் கரை ஒதுங்கின. மூவர் உடல்களையும் மீட்ட போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.