தமிழகம்

பழங்குடியினரின் பாரம்பரிய உரிமையைக் காக்க மத்திய அரசு உடனடியாக அவசரச் சட்டம் இயற்றுக: திருமாவளவன்

செய்திப்பிரிவு

பழங்குடியினரின் பாரம்பரிய உரிமையைக் காக்க மத்திய அரசு உடனடியாக அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் காரணமாக லட்சக்கணக்கான பழங்குடியின மக்கள் தாம் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த வனப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பழங்குடியினர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உடனடியாக அவசரச் சட்டம் ஒன்றை இயற்றுமாறு மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.  

வன உரிமைகள் சட்டம் 2006-ன் படி பாரம்பரியமாக வனப்பகுதிகளில் வாழ்ந்துவரும் பழங்குடியினர் யார் என்பதை சட்டப்பூர்வமாக விண்ணப்பித்து உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதனடிப்படையில் இந்தியா முழுவதும் சுமார் 43 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 19 லட்சம் பேர் மட்டுமே வனப்பகுதியில் குடியிருக்க உரிமையுள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 24 லட்சம் பழங்குடியினர் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த தமது வனப்பகுதிகளைவிட்டு விரட்டப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

பழங்குடியினரை வனப்பகுதிகளிலிருந்து விரட்ட வேண்டும் அங்குள்ள இயற்கை வளங்களைச் சுரண்ட வேண்டும் என திட்டமிட்டு கார்ப்பரேட் முதலாளிகள் சதிசெய்து வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அதற்கு உதவுவதாக அமைந்திருப்பது வேதனை அளிக்கிறது.

பழங்குடியினர் யார் என்பதை உறுதிசெய்ய வனப்பகுதிகளில் உள்ள பழங்குடி மக்கள் வாழும் கிராம சபைகள் நிறைவேற்றும் தீர்மானத்தையே ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என வன உரிமைப் பாதுகாப்புச் சட்டம் கூறியுள்ளது. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை புறக்கணித்து உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பழங்குடியினர் சுமார் 10,000 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. எனவே, பழங்குடியினரின் பாரம்பரிய உரிமையைக் காக்க மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் இயற்ற வேண்டும், அதற்கு தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும்" என தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

          
SCROLL FOR NEXT