தமிழகம்

தொடர் கொலை மிரட்டல், முகநூலில் அவதூறு; மே.17 இயக்க திருமுருகன் காந்தி காவல் ஆணையரிடம் புகார்

செய்திப்பிரிவு

தொடர் கொலை மிரட்டல் மற்றும் முகநூலில் அவதூறாக பதிவுகள், மெசேஜ்கள் அனுப்பி மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென திருமுருகன் காந்தி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலை அடுத்து பதற்றம் அதிகரித்து வந்த சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இந்திய விமானப்படை விமானங்கள் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் துல்லிய தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது.

இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. பின்னர் துல்லிய தாக்குதல் குறித்த பல்வேறு சந்தேகங்கள் ஊடகங்களில், சமூக வலை தளங்களில் கிளப்பப்பட்டது. தாக்குதல் குறித்து மே.17 இயக்க திருமுருகன் காந்தி ஆட்சேபித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அவரது பேட்டியில் தாக்குதல் தொடுப்பதைவிட உலக அரங்கில் பாகிஸ்தானின் செயல்மேல் வெறுப்பு உள்ளது. இதைப்பயன்படுத்தி இந்தியா பொருளாதார தடையை கொண்டுவரும் முயற்சியில் இறங்கியிருக்கவேண்டும்.

அமெரிக்காவே ஈரான்மீதும் மற்ற நாடுகள்மீதும் பொருளாதார தடைதான் கொண்டு வருகின்றது. அதுதான் நடைமுறை என தாக்குதல் குறித்து விமர்சித்திருந்தார். அவரது பேச்சின் காணொலி வாட்ஸ் அப் வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் அவருக்கு தொலைபேசியில், முகநூலில் கொலை மிரட்டல் வந்ததால் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் திருமுருகன் காந்தி தனக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளார்.

அவர் சார்பில் பிரவீன் என்பவர் அளித்த அவரது புகாரில் “கடந்த 26-ம் தேதி மாலையிலிருந்து தனக்கு தொடர்ச்சியாக மிரட்டல் கால்கள் வருகின்றன. வெறுப்பூட்டும், மிரட்டும் மெசேஜ்கள் வருகின்றன. என்னுடைய போன் நெம்பரை முகநூலில் பதிவு செய்துள்ளனர்.

இதன்மூலம் 200-க்கும் மேற்பட்ட போன் கால்கள் மூலம் கொலை மிரட்டலும், மிக மோசமான மிரட்டல் மெசேஜ்களும் தனக்கு வந்துள்ளது. பல போன் கால்கள் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்தும் மோசமாக மிரட்டியும் வருகிறது.

முகநூலிலும் கடுமையான அவதூறு பிரச்சாரம், மிரட்டல் விடுக்கப்படுகிறது. அவர்களது மிரட்டல் எனக்கு தனிப்பட்ட முறையிலும் எனது குடும்பத்தார் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.

அவர்களது போன் நெம்பர், முகநூல் லிங்க், மெசேஜ்களின் ஸ்க்ரீன்ஷாட் இணைத்துள்ளேன். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT