சென்னை மெட்ரோ ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் விரைவில் வைஃபை வசதி கொண்டுவரப்பட உள்ளது.
சுரங்கப்பாதையில் ஏற்படும் செல்போன் நெர்வொர்க் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதியதாக கொண்டுவரப்படவுள்ள இந்த வைஃபை வசதியால் பயணிகள் இணைய தள வசதி பெறலாம், செல்போனில் பேசலாம். சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணி முடிந்துள்ள நிலையில் 2 வழிதடங்களில் மொத்தம் 45 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, திருமங்கலம் முதல் சென்ட்ரல் வரையிலும், வண்ணாரப்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரையிலும் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சுரங்கப்பாதையில் பல்வேறு அடிப்படை வசதிகளுடன் சர்வதேச அளவுக்கு மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், செல்போன்களுக்கு நெட்வொர்க் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
மக்கள் பல்வேறு வேலையின் காரணமாக மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். அந்தப் பயணத்தில் தங்களது செல் போன் அல்லது லேப்டாப் போன்ற சாதனங்கள் மூலம் பணிகளை மேற்கொள்வார்கள். ஆனால், இந்த நெட்வொஇர்க் பிரச்சினையால் இணைய தளம் சார்ந்த பணிகளை செய்ய முடிவதில்லை.
இதற்கிடையே, மெட்ரோ ரயில் நிர்வாகம், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் செல்போன் நிறுவனங்களுடன் பணிகளை மேற் கொண்டு வருகிறது. மற்றொரு புறம் மெட்ரோ ரயில்கள், ரயில் நிலையங்களில் வைஃபை வசதியை விரைவில் கொண்டுவர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது.
இந்த வசதி கிடைத்தவுடன் செல்போன்களில் இணையதள வசதி கிடைப்பதுடன், அதன்மூலம் பேசிக் கொள்ளலாம். வீடியோக்கள் பார்க்கலாம், பாடல்களை கேட்கலாம். இதற்கிடையே, மெட்ரோ ரயில்கள், ரயில் நிலையங்களில் டிஜிட்டல் தகவல் பலகைகள் அமைக்கப்படவுள்ளன. இதில், மெட்ரோ ரயில் வழித்தடங்கள், ரயில் நிலையங்களின் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை இடம்பெறும்.