தமிழகம்

பட்ஜெட் வாய்பந்தல்; வாழ்க்கைக்கு உதவாது: இரா.முத்தரசன் விமர்சனம்

செய்திப்பிரிவு

மத்திய இடைக்கால பட்ஜெட் அலங்கரிக்கப்பட்டிருக்கும் வாய்பந்தல் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ததில் நாடாளுமன்ற மரபுகளை மத்திய பாஜக அரசு தகர்த்துள்ளது. ஆட்சிக் காலம் நிறைவடையும் நேரத்தில் நாடாளுமன்றத்தை தேர்தல் பிரச்சார மேடையாக பட்ஜெட் தாக்கல் நிகழ்வில் பாஜக மாற்றியுள்ளது. ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கான அரசு செலவுகளுக்கான நிதியொதுக்க ஒப்புதல் பெறுவதற்கான இடைக்கால பட்ஜெட்டில், அடுத்த 2030 ஆண்டு வரையிலான திட்டங்களை விளக்கிப் பேருரை ஆற்றி, தேர்தல் பிரச்சாரத்தை பாஜக தொடங்கியுள்ளது.

கடந்த தேர்தலின் போது '100 நாட்களில் கறுப்புப் பணத்தை மீட்போம், ஒவ்வொரு குடும்பத்தின் வங்கிக் கணக்கிலும் ரூ 15 லட்சம் வைப்பு நிதியாக செலுத்துவோம். விலைவாசியை கட்டுப்படுத்துவோம். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பளிப்போம்' என அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாய்ச்சவடாலாகிப் போனது. அனைத்து நிலையிலும் மோடியின் பாஜக அரசு படுதோல்வி அடைந்துள்ளது.

உயர்மதிப்பு பண நீக்கம், ஜிஎஸ்டி போன்ற பொருளாதாரத் தளங்களிலும் நடத்தப்பட்ட 'துல்லியத் தாக்குதலால்' சிறு, குறு தொழில் பிரிவில் லட்சக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. வணிக நிறுவனங்கள் திவாலாகிவிட்டன. 2018 ஆம் ஆண்டில் மட்டும் ஒரு கோடியே 10 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். கடந்த 4 ஆண்டில் சுமார் 6 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். விலைவாசி உயர்வை மக்கள் அன்றாட வாழ்க்கையில் உணர்ந்துள்ளனர்.

கழுத்தை முறிக்கும் கடன் சுமையால் தற்கொலை சாவுக்கு தள்ளப்பட்ட விவசாயிகளுக்கு கடன் நிவாரணம் ஏதும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6,000 தருவதாக கூறியிருப்பதும், வருமான வரிக்கான உச்சவரம்பை உயர்த்தியிருப்பதும் முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அறிவித்திருப்பதும் 'தேர்தல் ஆதாயம்' தேடும் மலிவான நோக்கம் கொண்டது.

வெளிப்படை தன்மை குறித்து சிலாகித்துக் கொள்ளும் பட்ஜெட் உரை, ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியது தொடர்பான ஊழல், முறைகேடுகள் குறித்து கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணை ஏற்க தைரியமில்லாமல் பதுங்கி மவுனம் காப்பது ஏன்?

நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உருவான பொதுத்துறை சொத்துக்களை விற்று வருமானம் தேடிவரும் மத்திய பாஜக அரசு, ராணுவ தளவாடங்கள் உட்பட பாதுகாப்புத்துறையின் உற்பத்தி பிரிவுகளில் அன்னிய முதலீட்டை அனுமதித்திருப்பது  நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தும்.

விஜய் மல்லையா, நீரவ் மோடி, முகுல் சோக்சி, போன்றோர் தேசிய வங்கிகளை சட்டப்பூர்வமாக கொள்ளையடித்துள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் போது 'தேடிவரும் குற்றவாளி' என அறிவித்திருப்பது கேலிக் கூத்தாகும்.

பாஜக மோடியின் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ‘இடைக்கால பட்ஜெட் வஞ்சக எண்ணங்களை மூடி மறைத்து, அலங்கரிக்கப்பட்டிருக்கும் வாய்பந்தல். வாழ்க்கைக்கு உதவாது' என்பதை பொதுக்கள் எளிதில் உணர்வார்கள் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது" என, இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT