தமிழகம்

ஆண்டாள் சர்ச்சையில் போலீஸார் போட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: பாரதிராஜா உயர் நீதிமன்றத்தில் மனு

செய்திப்பிரிவு

ஆண்டாள் சர்ச்சையில் வைரமுத்துக்கு ஆதரவாக பேசியதற்கும், விநாயகர் குறித்த சர்ச்சையில் தான் பேசிய கருத்துக்களுக்கு எதிராக போலீஸார் தொடர்ந்த வழக்கை ரத்துச் செய்யக்கோரி பாரதிராஜா மனு செய்துள்ளார்.

சென்னையில் கடந்த ஆண்டு  ஜனவரி 18-ம் தேதி நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, இந்து கடவுளான விநாயகரை இறக்குமதி கடவுள் என்று விமர்சித்ததுடன், ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் பேசினார். 

இதுதொடர்பாக, இரு பிரிவினரிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய பாரதிராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை வடபழனி போலீஸ் நிலையத்தில் இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பாரதிராஜா மீது புகார் அளித்தார்.

அவரது புகாரின்பேரில், வடபழனி போலீஸார் கடந்த ஆண்டு மே மாதம் 12-ம் தேதி வழக்கு பதிவு செய்தனர். தன்னை துன்புறுத்தும் நோக்கில் நான்கு மாதங்களுக்கு பின் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பாரதிராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தான் உள்நோக்கத்துடன் பேசவில்லை எனவும், அரசியல் சாசனம் வழங்கிய கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் தன் கருத்தை பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, பாரதிராஜா வழக்கு குறித்து வடபழனி காவல் ஆய்வாளர், புகார்தாரர் நாராயணன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT