தமிழகம்

மத்திய - மாநில அரசுகள் முகிலனை மீட்க வேண்டும்; அதுவரை சந்தேகம் உங்கள் மீதே! - ஸ்டாலின் ட்வீட்

செய்திப்பிரிவு

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை மத்திய, மாநில அரசுகள் மீட்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் காணாமல் போனதாக, ஏற்கெனவே மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

அம்மனுவில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து முகிலன் வீடியோ ஆதாரம் வெளியிட்ட நிலையில், கடந்த பிப்.15 அன்று சென்னையில் இருந்து நாகர்கோவில் ரயிலில் மதுரைக்குச் சென்ற அவர் திடீரென மாயமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், எழும்பூர் ரயில்வே காவல்துறை, எழும்பூர் காவல் நிலையம், திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாகச் சேர்க்க உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

மேலும், முகிலன் தொடர்பான சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆவணங்களை எழும்பூர் காவல் நிலையத்திடம் ஒப்படைக்க ரயில்வே போலீஸாருக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை எழும்பூர் போலீஸார் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணையை வரும் மார்ச் 4-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

முகிலனை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என, நாம் தமிழர் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஆதாரங்களை வெளியிட்ட முகிலன் காணாமல்போய் இதுவரை எங்கிருக்கிறார் என தெரியவில்லை.

கருத்துரிமையை நசுக்கும் மத்திய மாநில ஆட்சியில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பில் இருப்போர் அவரை மீட்க வேண்டும். அதுவரை சந்தேகம் உங்கள் மீதே!", என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT