தமிழகம்

குக்கர் சின்னம்: தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்துள்ளது; வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்- டிடிவி தினகரன்

ந.முருகவேல்

மக்களால் ஏற்றுக் கொண்டவர்களுக்கு சின்னம் ஒரு பிரச்சினை இல்லை என, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். தமிழகத்தில் இடைத்தேர்தலில் போட்டியிட ஏதுவாக பொதுச் சின்னமாக குக்கர் சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்கக் கோரி, டிடிவி தினகரன் தரப்பு தொடர்ந்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கான்வில்கர், அஜய் ரஸ்தோகி அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதன்படி அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அக்கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கலாம். இரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் தொடர்ந்த வழக்கை 4 வாரத்திற்குள் டெல்லி உயர் நீதிமன்றம் முடிக்க வேண்டும். 4 வாரத்திற்குள் உயர் நீதிமன்றம் முடிவெடுக்காவிட்டால், தேர்தல் ஆணையம் முடிவு செய்யலாம் என தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகவே வந்துள்ளது. உச்ச நீதிமன்றம் நேரடியாக சின்னம் வழங்கவேண்டும் என்று நேரடியாக கூறமுடியாது. 4 வாரத்திற்குள் முடிவெடுக்க முடியாத பட்சத்தில் அவர்கள் கேட்கும் சின்னத்தை ஒதுக்கச் சொல்லித் தான் ஆணைப் பிறப்பித்திருக்கிறார்கள். சரியாகத் தான் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.இதில் பின்னடைவு என்ற பேச்சுக்கே இடமில்லை.

சின்னத்தை வைத்து தான் வாக்காளிப்பார்கள் என்பது கடந்த காலம். அதற்கு உதாரணமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சொல்லலாம். மக்கள் தெளிவாக உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது எனது பெயரிலேயே பேரை தேடிப்பிடித்து நிற்கவைத்ததோடு, தொப்பி சின்னத்திலும் ஒருவரை சுயேdசையாக நிற்கவைத்தனர்.

ஆனால் மக்கள் விரும்பும் நபர் யார் எனும் பட்சத்தில் அவர்கள் தேடிப்பிடித்து வாக்களிப்பார்கள். சின்னமெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஆர்.கே.நகர் தொகுதியில் என்னை எதிர்த்து 33 அமைச்சர்கள் களமிறங்கி என்ன செய்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். மக்களால் ஏற்றுக் கொண்டவர்களுக்கு சின்னம் ஒரு பிரச்சினை இல்லை.

தமிழக மக்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆட்சி மீது எந்த அளவுக்கு வெறுப்பாக உள்ளனர் என்பதை அனைவரும் அறிவோம். தேர்தலை மனதில் கொண்டு வீட்டுக்கு ஒரு லட்சம் கொடுத்தால் கூட, அவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள்.

தேசிய கட்சிகளால் தமிழகத்திற்கு கடந்த காலங்களில் என்ன நன்மை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அவர்களுக்கு செல்வாக்கு இல்லை. தமிழ்நாட்டு மக்களின் நலன்களில் மாநிலக் கட்சிகள் தான் அக்கறை செலுத்தமுடியும். அது யாரென்று மக்களுக்கும் தெரியும்.
கூட்டணிக் குறித்து தமிழக நலன் கட்சிகளுடன் பேசிவருகிறோம்.

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டப்பேரவை உறுப்பினர்களின் தீர்ப்பைப் பொறுத்து நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டால் அரசுக்கு செலவினம் குறையும்" என்றார்.

SCROLL FOR NEXT