தமிழகம்

கோடநாடு கொலை வழக்கு: மனோஜ், சயானை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை

செய்திப்பிரிவு

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கில் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட மனோஜ், சயான் ஆகியோரை பிப்ரவரி 25 வரை கைது செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களில் முதல்வர் பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக தெஹல்கா முன்னாள் ஆசியர் மேத்யூ சாமுவேல் ஆவணப்படம் வெளியிட்டிருந்தார். அந்த ஆவணப்படத்தில் அந்தச் சம்பவங்களில் தொடர்புடையதாகக் கூறப்படும் மனோஜ், சயான் ஆகியோர் முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாகப் பேசியிருந்தனர்.

இதுதொடர்பாக அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் அளித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதை ரத்து செய்யக் கோரி மேத்யூ சாமுவேல் தொடர்ந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மனோஜ், சயான் ஆகியோர் கொலை வழக்கில் ஜாமீன் பெற்று வெளியில் இருப்பதால் முதல்வருக்கு எதிராகவும், தேர்தல் நேரத்தைக் கருத்தில் கொண்டும் பேட்டியளிப்பதால் அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென உதகை நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்த மனுவை கடந்த பிப்.8 அன்று ஏற்ற நீதிமன்றம், இருவரின் ஜாமீனையும் ரத்து செய்தது.

உதகை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, மத்திய குற்றப்பிரிவு வழக்கிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் கோடநாடு சம்பவங்களுக்கு முதல்வருக்குத் தொடர்பிருப்பது குறித்த தகவலை நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்ய வெட்கப்படுவதாகவும், அதுதொடர்பாக ஒப்புதல் வாக்குமூலமே அளிக்கத் தயாராக இருப்பதாகவும் வாதிட்டார்.

மேலும் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களுக்கும், மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கிற்கும் தொடர்பில்லை என்ற பொய்யான தகவலை சொல்லியே உதகை நீதிமன்றத்தில் ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை மனுத்தாக்கல் செய்ததாக குற்றம் சாட்டினார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான சென்னை நகர அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், கொலை, கொள்ளை வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த இருவரும் முதல்வருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களுடன் பேட்டியளிப்பதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதுபற்றி இருவரும் பேசுவது நீதித்துறையில் குறுக்கீடு செய்வதாகும் என்பதாலேயே ஜாமீன் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் சாட்சிகள் மிரட்டப்படுவதாகவும், ஆதாரங்கள் கலைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். வழக்கு குறித்து காவல்துறை பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை பிப்ரவரி 25-ம் தேதி ஒத்திவைத்தார். அதுவரை மனோஜ், சயான் இருவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என கோத்தகிரி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT