திருபுவனம் ராமலிங்கம் படுகொலை சம்பவத்தில் மதவெறி சக்திகளின் தூண்டுதலுக்கு இரையாகாமல் மக்கள் அமைதி காத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தஞ்சை மாவட்டம், திருபுவனத்தை சார்ந்த ராமலிங்கம் என்பவர், கடந்த பிப்ரவரி 5-ம் தேதி அன்று படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன, கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இக்கொலைச் சம்பவத்தை பயன்படுத்தி மத அடிப்படையிலான பகைமையையும், மோதலையும் அப்பகுதியில் ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் தேட இந்துத்துவ வகுப்புவாத சக்திகள் முயன்று வருகின்றன. வகுப்புவாத சக்திகளின் தூண்டுதலுக்கு அப்பகுதி மக்கள் இரையாகாமல் இருக்க வேண்டுமெனவும், அமைதிக்கு எந்த வித ஊறும் ஏற்படா வண்ணம் அப்பகுதி மக்கள் அமைதி காக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.